மகிந்தவை பிரதமர் பதவியில் அமர்ந்த 16 பேர் அணியின் ஆதரவு அவசியமில்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியின் உதவி தேவையில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டுமாயின் அதனை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் அவர்கள் சுதந்திரக்கட்சியின் பதவிகளை வகித்து வருகின்றனர்.

16 பேர் அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அவர்களின் இந்த விருப்பம் வெற்றியளிக்காது. 16 பேரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தும் நபருக்கு ஆதரவளிக்கலாம்.

அந்த நபர் ஜனாதிபதியாக தெரிவான பின்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக நியமிப்பர். அதற்கு மைத்திரிபால சிறிசேன தேவையில்லை.

மைத்திரிபால சிறிசேன தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கின்றார். மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டுமாயின், ரணில் விக்ரமசிங்கவை தூக்கி எறிந்து விட்டு, மகிந்தவை பிரதமராக நியமிக்க முடியும்.

அப்படிசெய்வதாக இருந்தால், தேர்தலுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன, மகிந்தவை பிரதமராக நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், நாங்கள் ஆதரவு வழங்குவோம் என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.