முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அமெரிக்கா தடுக்க முனைகிறதா என்ற கேள்வி இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசியதை அடுத்தே இந்தக் கேள்வி வலுப்பெற்றிருக்கிறது.
ஆனாலும் மேற்படி கேள்வி இப்போது எழுந்த ஒன்றல்ல. சில வாரங்களுக்கு முன்னரே அரசல் புரசலாக ஒரு செய்தி ஊடகங்களில் உலாவியது.
அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கு கோத்தபாய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் விண்ணப்பித்தனர் என்றும் ஆனால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கடந்த மார்ச் மாதம் தகவல்கள் வெளியாகின. அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
பாராளுமன்றத்தில் அப்போது உரையாற்றிய ஐதேக உறுப்பினர் அஷூ மாரசிங்க, கோத்தபாய ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்ள விண்ணப்பித்தனரா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு எந்தப் பதிலும் அவர்களிடம் இருந்து இதுவரை வரவில்லை.
இந்தநிலையில் மகிந்த – கெசாப் சந்திப்புக்குப் பின்னர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் அதனை அமெரிக்கா தடுக்கும் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தச் செய்தி கொழும்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால் கோத்தபாய ராஜபக்சவைக் களமிறக்கும் எண்ணத்துடன் கூட்டு எதிரணி குறிப்பாக மகிந்த ராஜபக்ச இருக்கிறாரோ இல்லையோ ஆனால் கோத்தபாய ராஜபக்சவைச் சுற்றி அத்தகையதொரு விம்பம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவர் போட்டியிடுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்ற தகவல் கூட்டு எதிரணியினருக்கு நிச்சயம் அதிர்ச்சியைத் தரக்கூடியது.
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இதனை தனிப்பட்ட ஒரு சந்திப்பின் போது வெளிப்படுத்தியிருந்தாலும் இவ்வாறானதொரு கருத்தை வெளிப்படுத்தும் நிலை தோன்றியிருப்பது முக்கியமானது.
இதற்கு முன்னர் 2010 ஜனாதிபதி தேர்தலிலும் 2015 ஜனாதிபதி தேர்தலிலும் அமெரிக்காவின் தலையீடுகள் இருந்ததாக பொதுவான குற்றச்சாட்டுகள் இருந்தன.
மகிந்த ராஜபக்சவுக்கு 2010ல் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளில் அமெரிக்காவே இருந்தது என்பது அப்போது ஆட்சியில் இருந்த தரப்புகள் வலுவாக குற்றம் சாட்டின.
அதேவேளை, 2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்துவதிலும் அமெரிக்கா கணிசமான பங்கை வகித்திருந்தது.
தம்மை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு அமெரிக்க, இந்தியப் புலனாய்வுப் பிரிவுகள் பங்காற்றியதாக மகிந்த ராஜபக்சவே வெளிப்படையாக கூறியிருந்தார்.
எனவே இலங்கையின் தேர்தல்களில் அமெரிக்காவின் தலையீடு என்பது புதிதான விடயம் ஒன்றல்ல. ஆனாலும் அமெரிக்கா யாரையும் போட்டியில் நிறுத்தக் கூடாது என்று உத்தரவிடும் தொனியில் அறிவுரை கூறியிருந்ததாக தெரியவில்லை. எனவே தான் கோத்தபாய ராஜபக்ச விடயத்தில் அமெரிக்காவின் அணுகுமுறை சற்று வேறுபட்டதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விடயத்தில் அமெரிக்கா செல்வாக்கு செலுத்த முற்பட்டிருந்தால் அதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. அதில் முக்கியமானது கோத்தபாய ராஜபக்ச இன்னமும் ஒரு அமெரிக்க குடிமகனாகவே இருக்கிறார்.
அமெரிக்க குடிமகனாக இருக்கும் ஒருவரின் விடயத்தில் அந்த நாட்டின் அரசாங்கம் அதிகாரபூர்வ நிலைப்பாடுகள் முடிவுகளை எடுக்க முனைந்தால் அதில் தவறு காண முடியாது.
அமெரிக்க குடியுரிமையைத் துறந்து விட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதனாலும் அமெரிக்க அரசின் தயவு கோத்தபாய ராஜபக்சவுக்குத் தேவைப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மகிந்த ராஜபக்ச தம்மைக் கோரினால் அமெரிக்க குடியுரிமையைக் கைவிடவும் தயாராக இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார்.
ஆனால் அவரால் அவ்வாறு உடனடியாக அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதாற்கு சட்டபூர்வமாக இடமளிக்கப்பட்டுமா என்ற கேள்விகள் உள்ளன.
அத்தகைய கேள்விகள் இருப்பதால் தான் கோத்தபாய ராஜபக்ச சட்ட நிபுணர்களுடன் இதுபற்றி ஆராய்ந்திருக்கிறார். ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார்.
தம்மிடம் இதுபற்றி கோத்தபாய ராஜபக்ச சட்ட ஆலோசனை கேட்டதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.
அமெரிக்க குடியுரிமையைத் துறப்பது ஒன்றும் கடினமான செயன்முறையல்ல என்றும், எனவே அமெரிக்க குடியுரிமை என்பது கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐதேக உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க அமெரிக்க குடியுரிமையைத் துறப்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல என்றும் அதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றும் கூறியிருந்தார்.
எது எவ்வாறாயினும் அமெரிக்க குடியுரிமையையும் வைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவினால் போட்டியிட முடியாது. எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருந்தால் கோத்தபாய ராஜபக்ச அதனை எப்படியாவது கைவிட்டாக வேண்டும்.
இங்கு தான் உள்ளது சிக்கல். இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் அவரால் அமெரிக்க குடியுரிமையை துறக்கும் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதே அந்தச் சிக்கல்.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவினால் விரும்பப்படாதவர். ஜனநாயக பாரம்பரியங்களை மதிக்கவோ, அரசியல் அனுபவம் கொண்டவரோ அல்ல என்று நாசூக்காக மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர் கெசாப் கூறியதாக சொல்லப்படுகிறது.
அதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
2014ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது கொழும்புக்கு வந்த அமெரிக்காவின் தெற்கு – மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலிடம் கோத்தபாய ராஜபக்ச மரியாதையாக நடந்து கொள்ளவில்லை என்று அதுல் கெசாப் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஜனநாயக பாரம்பரியங்களை மதிக்கத் தெரியாத இராணுவ ஆட்சியாளரைப் போன்று அதிகாரத் தொனியுடன் செயற்படக் கூடியவராக கோத்தபாய ராஜபக்சவை அமெரிக்கா அடையாளப்படுத்த முனைந்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி அவருக்கு எதிரான போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி தீர்ப்பளிக்கும் வரை அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு அமெரிக்கா இடமளிக்காது என்ற தொனியிலும் அதுல் கெசாப் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அதாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவைப் போட்டியிட விடாமல் தடுப்பதற்கு தம்மாலியன்ற காரியங்களில் அமெரிக்கா ஈடுபடும் என்று அதுல் கெசாப் கூறியதாகவே தகவல்கள் அடிபடுகின்றன.
இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானவுடனேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அதனை நிராகரித்தார். மகிந்த – கெசாப் சந்திப்பின் போது கோத்தபாய ராஜபக்ச விவகாரம் தொடர்பாக கலந்துரையாடவேயில்லை என்று அவர் கூறியிருந்தார்.
அதற்குப் பின்னர் இந்தச் செய்திகளை நிராகரித்து மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆங்கில ஊடகம் ஒன்று இதுபற்றி மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய போது கோத்தபாய ராஜபக்சவை போட்டியிட அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது என்று கூறியிருந்தார்.
ஆனால் அமெரிக்கத் தரப்போ இதுபற்றிய செய்திகளை ஏற்கவோ மறுக்கவோ இல்லை.
கொழும்பு ஊடகங்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமெரிக்கத் தூதுவர் அரசியல்வாதிகளையும் சிவில் சமூகத்தினரையும் சமூகத் தலைவர்களையும் சந்திப்பது வழக்கம் தான்.
இத்தகைய தனிப்பட்ட சந்திப்புகளின் உள்ளடக்கம் பற்றி அமெரிக்க தூதரகம் பகிரங்கமாக கலந்துரையாடாது என்று பதில் அளித்திருக்கிறது அமெரிக்கத் தூதரகம்.
இது இந்த விவகாரத்தை இன்னமும் சூடாக்கி விட்டிருக்கிறது. இந்த விவகாரம் இப்படியே நீள்வதை அமெரிக்கா ஆரோக்கியமானதாக கருதக்கூடும்.
ஏனென்றால் கோத்தபாய ராஜபக்ச மாத்திரமல்ல, மகிந்த ராஜபக்ச தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வருவதையே அமெரிக்கா விரும்பாது. அதனைத் தடுப்பதற்கு கடந்த காலங்களைப் போலவே முயற்சிகளை முன்னெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இது உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு தான். ஆனால் அமெரிக்கா தனது நலன்களையே முக்கியமாக பார்க்குமே தவிர உள்நாட்டு விவகாரம் என்று ஒதுங்கி நிற்காது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவில் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கமே ஆட்சியில் இருக்க வேண்டும். ராஜபக்சக்கள் ஆட்சியில் இருப்பது அத்தகைய நோக்கிற்கு அச்சுறுத்தலானது.
மகிந்த – கெசாப் சந்திப்பின் போது கோத்தபாய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ராஜபக்சக்களின் சீன சார்பு நிலை மீது அமெரிக்காவுக்கு நியாயமான சந்தேகங்கள் உள்ளன. இப்படியான நிலையில் ராஜபக்சக்களின் மீள்வருகையைத் தடுக்க அமெரிக்கா தனது செல்வாக்குகள் அனைத்தையும் பயன்படுத்தவே முனையும்.
இந்தநிலையில் ஒரு சந்தேகம். கோத்தபாயவை அமெரிக்கா விரும்பவில்லை என்ற செய்தி வெளியான போது மகிந்த தரப்பு ஏன் விழுந்தடித்துக் கொண்டு மறுப்புச் செய்திகளை வெளியிடுகிறது என்பது தான் அது.
ஏனென்றால் பொதுவாகவே மகிந்த தரப்பு அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டது. அவர்களைப் பொறுத்தவரை இந்தச் செய்தி இன்னும் பலத்தையே கொடுக்கக் கூடியது.
அமெரிக்காவை எதிர்த்து கோத்தபாயவை நிறுத்தியிருக்கிறது என்றோ நிறுத்த முடியாமல் அமெரிக்கா தடுத்து விட்டது என்றோ அமெரிக்காவின் சவாலையும் மீறி வென்று விட்டார் என்றோ ஒரு காலத்தில் பிரசாரங்களை முன்னெடுக்க இது உதவக் கூடியது.
ஆனால் அதனை விட்டு மகிந்த – கெசாப் சந்திப்பில் இதுபற்றிப் பேசப்படவேயில்லை என்று ராஜபக்ச தரப்பு வரிந்து கட்டுகிறது.
இது கோத்தபாயவை நிறுத்தும் எண்ணம் மகிந்தவுக்கு இல்லையோ என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.
அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிந்து கோத்தபாயவை போட்டியிட விடாமல் செய்து விட்டார் என்ற பழியில் இருந்து தப்பிப்பதற்காக இந்த அவசர மறுப்புகள் வெளியாகின்றனவோ என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எது எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலும் கூட சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கும் தலையீடுகளுக்கும் உட்பட்ட ஒன்றாகவே இருக்கப் போகிறது. அதற்கான அறிகுறிகள் தான் இப்போது வெளிப்படுகின்றன.