கண் மூடுவதற்குள் தங்களது பேரனை எப்படியாவது பார்த்தவேண்டும் என்று 10 ஆண்டுகள் தவம் இருந்த தாத்தா பாட்டியினர் பொலிசின் உதவியோடு வெளிநாட்டில் இருந்து வந்த பேரனை சந்தித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சத்தியசீலன் (72) என்பவரது மகன் ராஜாவுக்கு, ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்துவிட்டனர்.
குழந்தையை எடுத்துக்கொண்டு மனைவி அமெரிக்கா சென்றுவிட்டார். ராஜா வெளியூரில் வேலை பார்த்து வந்தார். சத்யசீலன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் தங்கள் பேரன் பிறந்த போது பார்த்தனர். ஆனால் அதன்பிறகு மகனை விட்டு பேரனுடன் மருமகள் பிரிந்து சென்று விட்டதால் அவர்களால் பேரனை பார்க்க முடியவில்லை.
அமெரிக்காவில் இருந்து பேரனுடன் மருமகள் சென்னை வரும்போதெல்லாம் எப்படியாவது தங்கள் பேரனை பார்த்து விடவேண்டும் என தவமாய் காத்து இருந்தனர். ஆனால் 10 ஆண்டுகள் ஆகியும் அவர்களால் பேரனை மட்டும் சந்திக்கவே முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பேரனுடன் மருமகள் சென்னை வந்து இருக்கும் தகவல் சத்யசீலனுக்கு கிடைத்தது. இந்தமுறை எப்படியாவது பேரனை சந்திக்க முடிவு செய்த அவர், தனது மனைவியுடன் மருமகள் வீட்டுக்கு சென்றார்.
ஆனால், பேரனை காட்டுவதற்கு மருமகள் மறுத்துவிட்டார். இதையடுத்து சத்யசீலன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து நடந்த விவரங்களை தெரிவித்தார். நானும், எனது மனைவியும் கண் மூடுவதற்குள் ஒரு முறையாவது எங்கள் பேரனை எட்டி நின்றாவது பார்த்து விட்டு சென்று விடுகிறோம். எங்களுக்கு இந்த உதவியை செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, பொலிசின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் , காவல் நிலையத்துக்கு பேரன் அழைத்து வரப்பட்டார். 10 ஆண்டுகளாக காத்திருந்த தங்கள் பேரனை நேரில் பார்த்ததில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த பொலிசாரை நெகிழச்செய்தது.