முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் படுகின்றமையை முல்லை ஊடக அமையம் வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பிலான ஊடக அறிக்கை ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவில் ஊடகபணியாற்றுவோர் பல்வேறு இடங்களில் பல தரப்புக்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018-02-05 ஆம் திகதி முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தரப்பினரால் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்
2018-04-11 ஆம் திகதி முத்தயன்கட்டு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரினால் சுயாதீன ஊடகவிலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதை நாம் அறிந்துள்ளோம்.
2018-05-07 ஆம் திகதி கேப்பாபுலவு பிரதான வீதியில் ஊடகவியலாரர் ஒருவர் அடையாளம் தெரியாதோரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 14ம் திகதி நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்களினால் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் நெருக்கடியான காலப்பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர்.
சிலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். சிலர் கொலை முயற்சி தாக்குதல்களிலிருந்து படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இத்தகைய சூழல் ஊடகவியலாளர்கள் பலரையும் ஊடகத்துறையில் இருந்து வெளியேறவும், நாட்டை விட்டு தப்பிச்செல்லவும் வழிவகுக்கின்றது.
எனினும் அண்மைக் காலங்களில் மீண்டும் அதிகரித்துள்ள அதேசூழல் மிகமோசமான நெருக்குவாரங்களை ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை முல்லை ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.
மேலும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை முல்லை ஊடக அமையம் சுட்டிக்காட்டுவதுடன், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.