எதிர்வரும் வடமாகான சமைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்செயலாக ஒரு பிளவு ஏற்பட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நல்ல தொரு சகுனமாக இருக்கமாட்டாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ( புளொட்) தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
கேள்வி : வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்தி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி என்ற ரீதியில் இந்த விவகாரத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டது என்று கூறமுடியாது. ஏனெனில், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அந்த செயலணியில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படாத அதே வேளை, தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது கூட்டமைப்பை புறக்கணித்திருப்பது என்ற தோற்றப்பாட்டைக் காண்பித்திருக்கிறது உண்மைதான்
கொழும்பில் இருக்கின்ற தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள், அபிவிருத்திகள் எங்களுடைய மக்களுக்கு சரியான முறையில் செல்லும் என்று எதிர்பார்க்கமுடியாது. இது மிகவும் தவறான ஒரு முடிவாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதைவிட இந்த செயலணி பெரியளவில் செயற்படும் என
நான் எதிர்பார்க்கவில்லை.
கேள்வி : அடுத்த வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற வாதம் சமீபகாலமாக தமிழர்கள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கின்றது. அந்த விடயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிற்க வேண்டும் என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் பல தளங்களிலிருந்தும் எழும்பிக் கொண்டிருக்கிறது.
இதில் பலருடைய பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள் என்று பேசப்படுகின்றது.
அந்த அடிப்படையில் கூட்டமைப்புக்குள் தற்செயலாக ஒரு பிரிவு ஏற்பட்டு இவ்விருவரும் தனித்தனியாக போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நல்லதொரு சகுனமாக இருக்காது.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பலவீனமாக இருக்கிறது. எனவே கூட்டமைப்பை பலமான இயக்கமாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. பலமாக இருந்த பொழுதே எங்களால் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கிறது.
அந்த அடிப்படையில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் பிரிவுகள் ஏற்பட்டு கூட்டமைப்பு உடையுமாகவிருந்தால் அது பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும்.
அவ்வாறு ஒரு நிலைமை உருவாகுமானால் எதிர்காலத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எங்களை ஒரு பொருட்டாகவே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து நின்று ஒரேமாதிரியாக குரல் கொடுத்தாலும் அது பிரயோசனமற்றதாகவே இருக்கும்.
எனவே கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அனைவரும் கூடிப்பேசி முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் ஆரோக்கியமானதொரு முடிவை எடுப்பதுதான் தமிழ் மக்களுடைய எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
கேள்வி: முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனித்து களமிறங்கவிருப்பதான செய்தியும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா களமிறங்கவிருப்பதான செய்தியும் வந்ததற்கான பின்னணி என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இந்த நிலைமை உருவாகியதற்கான பின்னணி கடந்த மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் தனி நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையுடன் ஆரம்பிக்கப்பட்டதன் விளைவே.
தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் பின்னர் பூதாகரமாகி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருமளவுக்கு சென்று பின்னர் சம்பந்தன் மேற்படி விவகாரத்தில் தலையிட்டு சுமுக நிலைமைக்கு கொண்டு வந்ததன் பின்னணிதான் இன்றைய இந்த நிலைமைக்குக் காரணமாக இருக்க முடியும்.
நான் நினைக்கிறேன், இந்த நிலைமை உருவாகியதற்கு நானா நீயா என்ற போட்டிதான் காரணமாக இருக்கும்.
நாங்கள் கொண்டுவந்த அரசு என்று தமிழர்கள் கூறிக்கொண்டிருக்கும் இந்த அரசைக் கொண்டு தமிழர்களால் எதனையும் சாதிக்க முடியாத சூழல் இருக்கின்ற நிலையில், நாங்களும் (கூட்டமைப்பு) பிரிந்து பிளந்து நிற்கும் நிலைமை ஏற்பட்டால் மிகப் பெரிய பின்னடைவை தமிழர்களுக்கு உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கேள்வி: 2015 ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்த புதிய அரசியலமைப்புக்கான பணிகள் சில மாதத்துக்கு முன்னர் ஸ.தம்பிதமடைந்திருந்த நிலையில், மீண்டும் அந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அது மிகவும் மந்தகதியில் நடைபெறுவதையே அவதானிக்க முடிகிறது. அந்த அடிப்படையில் இந்தப் பணி அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவடையும் என்ற நம்பிக்கை தங்களிடம் இருக்கிறதா?
பதில் : உண்மையைக் கூற வேண்டுமென்றால் ஆரம்பம் முதலே எனக்கு இந்தப் பணியில் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. இதனை நான் பல தடவைகள் பகிரங்கமாக பல இடங்களில் கூறியிருக்கிறேன்.
தென்னிலங்கையின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த அடிப்படையில் 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற எந்தவொரு தென்னிலங்கை அரசியல் தலைவருக்கும் அதிகாரப்பகிர்வை வழங்குவதில் சிறுதுளியளவு உடன்பாடு கூட இல்லை.
இந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களில் ஓரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்தக் கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டுவருவார். தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார்.
இன்றைய நிலையில் மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தென்னிலங்கைக் கட்சிகள் இருக்கின்றன.அந்த அடிப்படையில் பார்த்தால் அவர்களுடைய கவனம் அதன் மேல் தான் இருக்கப்போகிறதே தவிர, அதிகாரப்பகிர்வு விடயத்திலோ, அரசியலமைப்பு விடயத்திலோ இருக்கப்போவதில்லை. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் மேற்படி கருமத்தில் ஒத்துழைக்கப்போவதில்லை.
இன்று இரு கட்சிகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், அவர்களுடைய கவனங்கள் எல்லாம் அதன் மேல் இருக்குமே தவிர, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதிலோ, தமிழர்களுடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதிலோ இருக்கப்போவதில்லை.
தங்களுக்குள் நிலவும் முரண்பாடுகளை களைவதிலும் அடுத்த தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது போன்ற விடயங்களில் தான் அவர்களுடைய கவனம் இன்று இருக்கிறதே தவிர, இவற்றை எல்லாம் விட்டுவிட்டு தமிழர்களுக்கு தீர்வைத் தர அவர்கள் முன்வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
கேள்வி: அப்படியென்றால் இந்த ஆட்சிக்காலத்துக்குள் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவேன் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழர்களுக்கு எந்த அடிப்படையில் நம்பிக்கையைக் கொடுத்திருந்தார்?
பதில்: நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் தனித்து அரசாங்கங்களை அமைந்து வந்தநிலையில், ஒரு கட்சி தீர்வைக் கொண்டுவந்தால் அதை மற்ற கட்சி எதிர்த்து வந்ததே வரலாறு. பண்டாசெல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் போன்றவை அவ்வாறே குழப்பப்பட்டு வந்தன.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மாத்திரம் தான் எங்கள் ( தமிழர்கள்) மீது திணிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இவ்விரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கும் நிலையில் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் இருந்ததை மறுக்கமுடியாது.
நீங்கள் கூறியது போன்று ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்புக்கான பணி மிக விரைவாக நடந்தது உண்மை. ஆனால், இன்று இரு தேசியக் கட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடு அந்தப் பணியின் வேகத்தை சற்றுக் குறைந்திருக்கிறது.
மேலும், எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் அந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மாத்திரம்தான்செல்வாக்கை மக்கள் மத்தியில் கொண்டிருக்கும். ஒரு வருடம் கடந்துவிட்டால் மக்கள் மத்தியில் படிப்படியாக செல்வாக்கை இழக்கத் தொடங்கிவிடும்.
இதுதான் இயற்கை. அந்த அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக இருந்திருந்தால் 2016 இற்குள் அதனைக் கொண்டு
வந்திருக்க வேண்டும். ஆனால் அது தவறவிடப்பட்டுவிட்டது.
அத்துடன், இந்த அரசியலமைப்புப் பணியில் ஈடுபட்ட எவரும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்று விரும்பியதில்லை என்பதையும் நான் தெட்டத் தெளிவாக இங்கு கூறிவைக்க விரும்புகிறேன். அதன் காரணத்தினால்தான் இந்தப் பணியை முன்கொண்டு செல்ல முடியாமல் போனது.
கேள்வி: அப்படியென்றால் இனி எந்த காலத்திலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அப்படித்தானே..?
பதில்: 70 வருடமாக தீர்வு என்பது வெறும் வார்த்தையாக இருந்து கொண்டிருக்கிறதே தவிர, அதனை நடைமுறையில் தமிழர்கள் அனுபவிக்கவில்லை.
70 வருட தமிழர்களுடைய ‘தீர்வு’ போராட்டத்தில் உருப்படியாக அரசியலமைப்பு மாற்றமாக கொண்டு வரப்பட்ட ஒரே ஒரு விடயம் 13 ஆவது திருத்தம் மாத்திரமே. 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட வேளையில் அது போதாது என்று நாங்கள் கூறினோம்.
அது இந்தியாவினுடைய அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறானதொரு அழுத்தம் இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் உருவாகும் என்று நான் நம்பவில்லை.
இன்று இந்தியாவினுடைய முழுமையான கவனம் இலங்கையில் சீனாவினுடைய ஆதிக்கத்தை கண்காணிப்பதும் அதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதிலும் மாத்திரமே இருக்கிறதே தவிர, தமிழ் மக்களுடைய நலனிலோ, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலோ இல்லை. ஆனால் தமிழர்கள் இலங்கையில் சுமுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணப்பாடு அவர்களுக்கு ( இந்தியாவுக்கு) இருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்று ஒரு பலமான தலைமை இல்லை. எதிர்காலத்தில் ஒரு பலமான தலைமை தமிழ்
நாட்டில் உருவாகி, அதனூடாக ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
இல்லாவிட்டால் சர்வதேசத்தின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் அதனுடாக ஒரு மாற்றம் ஏற்படலாமே தவிர, வேறு எந்த வழியும் தற்போதைக்கு இல்லை என்றே நான் நம்புகின்றேன்.
கேள்வி: 2015 தேர்தலில் பல வாக்குறுதிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்ற பல விடயங்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மேற்படி விடயங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எந்த அளவில் இருக்கிறது?
பதில்: மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலம் தொட்டு கூட்டமைப்பு ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்ற வண்ணமே இருக்கிறது. அதற்கிணங்க சில விடயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களும், நாங்களும் எதிர்பார்த்த வேகத்தில் அவை
நடைபெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இவை தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
கேள்வி: நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனை சரி செய்வதற்கான முயற்சிகள் ஏதாவது நடைபெறுகின்றனவா?
பதில்: கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது உண்மை. 34 வீதமான வாக்குகள் சரிந்தது என்பது மிகப்பெரிய பின்னடைவு. இந்த பின்னடைவு நிரந்தரமா? அல்லது தற்காலிகமானதா? என்று ஆராய வேண்டியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான பல முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கமும் அதனை முன்னெடுக்கின்றது. அதேபோல் வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவை என்ற மாயயை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு சென்றது என்று பல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தான் இந்தப் பின்னடைவுக்கான காரணம் என நான் கருதுகிறேன்.
ஆனாலும் நாங்கள் எங்களைத் திருத்திக் கொண்டு மக்களுடைய சேவைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி மக்களுடன் நின்று சேவையாற்றாவிட்டால் இந்தப் பின்டைவு நிரந்தரமான பின்னடைவாக செல்லக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் அனுபவம் மிகக்குறைவு. அதேபோல் நிர்வாகத்திறனும் அவரிடம் மிகவும் குறைவு. முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய மாகாணசபை மிகத் திறம்பட இயங்கியது என்று நான் கூறமாட்டேன். அவர் ஒரு அரசியல்வாதியாகச் செயற்பட்டிருக்கவில்லை. அவர் எல்லாவற்றையும் சட்டத்தினூடாகவே மேற்கொண்டிருந்தார். அதற்காக
நான் சட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என்று கூறவரவில்லை. அதற்காக எல்லாவற்றையும் சட்டத்துக்குப் பின்னால் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அது இந்த நாட்டுக்கு பொருந்தாத விடயம். அவருடைய பல விடயங்களில் பின்னடைவு இருப்பதை மறுக்கமுடியாது.
தனிப்பட்ட ரீதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது. அவரையொரு இரட்சிக்கவந்த இரட்சகராக பார்க்கும் தன்மையையும் என்னால் அவதானிக்கக் கூடியதாக விருக்கிறது.