‘எக்காரணத்தைக் கொண்டும் 7 தமிழர்களை விடக்கூடாது’ என்பதில் மோடி அரசு உறுதியாய் இருப்பது தெளிவாகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ஏழு தமிழர்களையும் விடுவிக்கக்கோரி தமிழக அரசு அனுப்பிய மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது சதிச்செயலிலோ ஈடுபடாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட நிலையிலும், 28 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள்.இவர்களை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானத்தையும் விண்ணப்பத்தையும் மத்திய அரசின் சொல்படி குடியரசுத் தலைவர் நிராகரித்திருக்கிறார்.
இதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளிலும் இதே கோரிக்கையை தமிழக அரசு விடுத்து, அதுவும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் நிராகரித்ததற்கான சரியான, சட்டப்படியான காரணத்தை மத்திய அரசு சொன்னதில்லை; சட்டத்தைக் குழப்பி நீதிமன்றத்துக்குள் ஒளிந்துகொண்டு காலத்தைக் கடத்தும் கயமைச் செயலைச் செய்துகொண்டிருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு.
இதிலிருந்து, ‘எக்காரணத்தைக் கொண்டும் 7 தமிழர்களை விடக்கூடாது’ என்பதில் மோடி அரசு உறுதியாய் இருப்பது தெளிவாகிறது.
இதனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் விடுதலைத் தீர்ப்பைப் பெற முடியாதபடி முட்டுக்கட்டையாகவே இருக்கும் மோடி அரசு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆகவே அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி தமிழக அமைச்சரவையே முடிவெடுத்து ஆளுநர் மூலம் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
“கையிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்” என்பதற்கேற்ப, உடனடியாக தமிழக அமைச்சரவை கூடி 161ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.