தமிழகத்தில் காணாமல் போன 15 வயது சிறுவனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள சித்ரா அப்பார்ட்மெண்ட் அருகே நடைபாதையில் வசிப்பவர் பெருமாள்.
பழைய புத்தகங்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வரும் இவருக்கு ராஜேஷ் என்ற 15 வயது மகன் இருந்தார்.
ராஜேஷ் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் திகதி பொங்கல் பண்டிகையன்று திடீரென்று காணமல் போனார்.
இதனால் அவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராஜேசின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி முன்னிலையில் அவரின் அலுவலகத்தில் பரத்குமார்(19) உட்பட 3 சிறுவர்கள் தங்களின் வழக்கறிஞருடன் சரணடைந்தனர்.
அப்போது அவர்கள், 5 மாதத்துக்கு முன் சூளைமேட்டில் காணமல் போன ராஜேசை நாங்கள் தான் கொலை செய்தோம்.
சம்பவ தினத்தன்று நாங்கள் அனைவரும் ஒன்றாக சுடுகாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ராஜேஷ் எங்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினான்.
நாங்கள் முடியாது என்று கூறியதால், உடனடியாக எங்களுடன் இருந்த செல்வத்தின் கழுத்தில் ராஜேஷ் கத்தியால் கீறினான்.
இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் ராஜேசை சுற்றி வளைத்து அடித்து உதைத்து, அதன் பின் அவன் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவனையே சரமாரியாக குத்தி கொலை செய்தோம்.
அதன் பின் அந்த சுடுகாட்டிலே பள்ளம் தோண்டி புதைத்துவிட்டோம் என்று கூறியுள்ளனர்.
அதன் பின் அங்கு சென்ற பொலிசார் ராஜேசின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான சரணடைந்த 3 சிறுவர்களையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.