தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது (39). கூலித்தொழிலாளியான இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2011 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட தகராறில் ஷாகுல் அமீது அவரது மனைவி பாத்திமா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பாத்திமாவை அப்பகுதி மக்கள் மீட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி பாத்திமா மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தக்கலை பொலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி மனைவியை கொலைசெய்த ஷாகுல் அமீதுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.