விமானத்தை தவற விட்ட நடன இயக்குநர்!

இந்தியாவில் தான் செல்ல வேண்டிய விமானத்தை தவற விட்டதால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நடன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் குறைந்த கட்டண சேவை நிறுவனமாக இண்டிகோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நகருக்கு இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே இண்டிகோ Call Center-க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், குறித்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் போதிய பாதுகாப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மிரட்டல் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. அத்துடன் பொலிசார் நடத்திய விசாரணையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடன இயக்குநராக பணியாற்றி வரும் மோகித் என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், மோகித் குமார் 5 மணிக்கு இண்டிகோ விமானத்தில் செல்ல தயாராக இருந்துள்ளார். ஆனால், அந்த விமானம் 4.52 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் இவ்வாறு செய்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.