80 வயது பாட்டியை கைது செய்வதா? சமூக வலைதளங்களில் கேள்வி

சேலம் 8 வழி சாலைக்கு எதிராக போராடிய மூதாட்டியை கைது செய்த போலீசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் பசுமை வழி சாலைக்காக 8000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பசுமை வழி சாலை மூலமாக 500 ஏக்கர் வனம், ஆறுகள் மற்றும் மலைப்பிரதேசங்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நிலத்தை உரிமையாளர்கள் அனுமதியின்றி அளவெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்க்கும் நிலத்திற்கு சொந்தக்காரர்களை பொலிஸார் அராஜகமான முறையில் கைது செய்து வருகின்றனர்.

அதேமுறையில் சேலம் அடிமலைபுதூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் தனது நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று ஒரு மூதாட்டி தன் நிலத்தில் விழுந்து புரண்டு அழுதிருக்கிறார். அதனை அலட்சியம் செய்த பொலிஸார் தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக அந்த மூதாட்டியையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்த விடயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான ஷாநவாஸ். தனது முக நூல் பதிவில் தம் வாழ்வாதாரத்தை பிடுங்கும் பொலிஸிடம் வாக்குவாதம் செய்த மூதாட்டி கைது செய்யப்படுகிறார் ஆனால் கைது செய்யப்பட வேண்டிய எஸ் வி சேகர் இன்னமும் பொலிஸ் பாதுகாப்போடு இருக்கிறார் எனும் அர்த்தம் வரும்படி செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

தேசியக் கொடியை சட்டையில் தவறான இடத்தில குத்தியபடி வலம் வந்த எஸ் வி சேகர் தேசபக்தர் எனில் தம் மண்ணை பாதுகாக்க போராடும் இந்த மூதாட்டி யார் வழக்கம் போல சமூக விரோதிதானே ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

ஷாநவாஸின் இந்த பதிவு இப்போது பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.