பொது எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயற்படுவதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடும் சீற்றமடைந்துள்ளதாகவும், அதனால் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என்று அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, நிமல் லன்சா உட்பட மேலும் சில எம்.பிக்கள் பஸில் ராஜபக்ஸவுக்கு சார்பான நிலைப்பாட்டில் இருப்பதுடன், பொது எதிரணியால் எடுக்கப்படும் சில முடிவுகளை விமர்சித்து வருகின்றனர்.
மறுபுறத்தில் விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோரின் கட்சி உறுப்பினர்கள் பஸில் ராஜபக்ஸ தரப்பைச் சாடிவருகின்றனர். இதனால் பொது எதிரணிக்குள் தற்போது கருத்து மோதல் வலுத்துள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பில் பொது எதிரணி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை.
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயை ஆதரிக்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பஸில் அணியைச் சார்ந்த எம்.பிக்கள் பங்கேற்காமையே மஹிந்தவைக் கடுப்பாக்கியுள்ளது.
இது தொடர்பில் பஸில் ராஜபக்ஸவிடம் மஹிந்த விளக்கம் கோரினார் எனவும், பொது எதிரணிக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் இருக்கக்கூடாது எனப் பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.