இந்துப் பெண்ணை மணம் செய்த ஒரு இஸ்லாமிய இளைஞரை இந்துவாக மதம் மாறச் சொல்லி ஒரு பாஸ்போர்ட் அதிகாரி சத்தம் இட்டுள்ளார்.
கடந்த 2007 ஆம் வருடம் முகமது அனாஸ் சித்திக்கி என்னும் இஸ்லாமிய இளைஞர் தான்வி சேத் என்னும் இந்துப் பெண்ணை மணம் புரிந்தார். அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தான்வி சேத் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்தனர். அதை ஒட்டி நேற்று லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அங்கு தங்களை ஒரு அதிகாரி கேவலம் செய்ததாக முகமது அனாஸ் தெரிவித்துள்ளார். அவர், “முதல் இரு இடங்களிலும் சரிபார்க்கும் போது அனைத்தும் சாதாரணமாகவே நடந்தது. மூன்றாம் இடத்தில் உள்ள சி 5 கவுண்டரில் விகாஸ் மிஸ்ரா என்னும் அதிகாரி இருந்தார். முதலில் அவர் எனது மனைவியை அழைத்து விவரங்களை சரி பார்த்தார்.
எனது பெயரை கண்டதும் அவர் என் மனைவியிடம் அவர் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்திருக்கக் கூடாது என சத்தம் போட்டார். அதனால் என் மனைவி கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். அத்துடன் அவருடைய பெயரை மாற்றிக் கொண்டு வருமாறு கூறினார். அதற்கு என் மனைவி தான்வி மறுத்து விட்டார். மேலும் தனது குடும்பத்தினர் இதே பெயரில் அவர் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறினார். அதன் பிறகு மிஸ்ரா அவருடைய உயர் அதிகாரியைப் பார்க்க தான்விக்கு உத்தரவிட்டார்.அதன் பிறகு அவர் என்னை அழைத்தார். அப்போது அவர் என்னை வார்த்தைகளால் மிகவும் துன்புறித்தினார். அத்துடன் அவர் நான் இந்துவாக மதம் மாறவில்லை எனில் எனது திருமணம் செல்லாது எனக் கூறினார். அத்துடன் நான் உடனடியாக இந்துவாக மதம் மாற வேண்டும் என பெரிதாக சத்தம் போட்டார். அதன் பிறகு நாங்கள் உயர் அதிகாரியான விஜய் திவேதியை சந்தித்தோம். அவர் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். அத்துடன் இது குறித்து புகார் அளிக்குமாறு யோசனை அளித்தார்.” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு முகமது அனஸ் மற்றும் தான்வி டிவிட்டரில் ப்கார் அளித்துள்ளனர். அந்த புகாரில் நடந்தவைகளை விவரித்து தாங்கள் இருவரும் எந்த மதக் கோட்பாட்டையும் கடை பிடிக்கவில்லை எனவும் அதனால் பெயர் மாற்றவோ மதம் மாறவோ தேவை இல்லை எனவும் கூறி உள்ளனர். அத்துடன் தாங்கள் 12 வருடம் எந்த ஒரு பிரச்னையும் இன்றி மதம் மாறாமல் வாழ்ந்து வருவதாகவும் அவ்வாறு வலியுறுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.