புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க இதன் போது மன்றில் முன்னிலையாகினார். அவர் சார்பில் சட்டத்தரணி மன்றில் தோன்றினார்.
அரச சட்டவாதி இவ்வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இதையடுத்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி அன்று எடுத்துக்கொள்வதாக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ள நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.