குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பானதொரு நாடாக இலங்கை விளங்குகின்றது. கடந்த அரசின் ஆட்சிக் காலம் தொடக்கம் இன்றுவரை மேல் மட்டத்தில் ஏராளமான குற்றச் செயல்கள் இங்கு இடம்பெற்றுள்ள போதிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் அத்கையவர்கள் அரசுக்கு சவால் விடும் வகையில் நடந்து கொள்வதைக் காணமுடிகின்றது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட ஊழல் மோசடிகள் மிகப் பெரியவை. நாட்டின் பொருளாதாரத்தையே இவை ஆட்டம் காணச் செய்துவிட்டன. அதைவிட ஏராளமான கொலைகளும் இடம்பெற்றன.
இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள், வர்த்தகர்கள், சாதாரண பொதுமக்கள் எனப் பலர் அடங்குவார்கள். வெள்ளைவானில் கடத்திச் சென்று கொலை செய்வது அப்போதெல்லாம் சர்வ சாதாரணமானதொரு விடயமாகவே காணப்பட்டது.
ஆனால் இவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படாது சுதந்திரமாக உலவுவதைக் காண முடிகின்றது. இந்த நிலையில் நாட்டில் நீதியை எவ்வாறு எதிர்பாக்க முடியும்?
சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் பிரபலமான தமிழ் அரசியல்வாதியும், புகழ்பூத்த வழக்கறிஞருமான குமார் பொன்னம்பலம் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி தொடர்பான விபரங்கள் ஊடகங்களில் அப்போது வெளிவந்தன. ஆனால் அந்தக் கொலைக் குற்றவா ளிக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிராஜ் கொலை வழக்கிலிருந்து கொலைச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
ரவிராஜின் அவலச்சாவுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவேயில்லை. பிரபல ஊடகவியலாளரான லசந்த விக்கிரம துங்கவின் கொலையில் தொடர்புடையவர்களெனச் சிலர் மீது பகிரங்கமாகவே குற்றம் சாட்டப்பட்டபோதிலும், கொலைக் குற்றவாளி கள் தண்டனை பெறுவதிலிருந்து தப்பிவிட்டனர்.
திருமலை மாணவர்களின் படுகொலை, மூதூரில் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் கொலைகள், தமிழ் ஊடகவியலாளர்கள் சிவராம், நிமலராஜன் ஆகியோரின் கொலைகள், பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரதீத் எக்னலிகொட கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பல விடயங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவதைக் காண முடிகின்றது.
கொலைக்குப் பதிலாக கூட்டு அரசில் ஊழல்
தற்போதைய அரசின் காலத்தில் கொலைச் சம்பவங்கள் மிகவும் குறைந்து காணப்படுகின்ற போதிலும் ஊழல், மோசடிக் குற்றங்கள் இடம்பெறவே செய்கின்றன. மத்திய வங்கியில் நிகழ்ந்த பிணை முறி மோசடி மிகப் பெரியது. இதன் முதன்மைக் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் ஏதோவொரு வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவருகின்றார்.
இவரைக் கைதுசெய்து நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு அரசினால் முடியவில்லை. இதே பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அவமானத்துக்குரியது. எந்த வகையிலும் மன்னிக்க முடியாதது. ஆனால் இது தொடர்பாக அரச தலைவர் காத்திரமான நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இதைவிடபோதைப் பொருள் விற்பனை யுடன் தொடர்புடைய பலர், எவருக்கோ கையூட்டு வழங்கித் தப்பித்துக் கொள்வதையும் காணமுடிகின்றது. இவர்களால் பலர் சீரழிக்கப்படுவதை உரியவர்கள் கவனத்தில் கொள்வதாகவும் தெரியவில்லை. நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் ஆகியவை தாராளமாக இடம்பெற்று வருகின்றன. வடக்கைப் பொறுத்தவரையில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் பெரும் தலைவலியாகவே அமைந்துள்ளது. ஆனால் குற்றவாளிகளைக் கைது செய்கின்ற சடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதைக் காண முடிகின்றது.
இதுவரை காலமும் எதற்கெடுத்தாலும் போரையே காரணமாகக் கூறிவந்தவர்கள், போர் ஓய்ந்த பின்னர் வேறு எதையெதையோ கூறித் தப்பித்துக் கொள்கின்றனர். நாட்டின் தலைமை மந்தமாகச் செயற்படும் போது, கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தமது இஷ்டப்படியே நடந்து கொள்ளச் செய்வார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவராலுமே முடியாது. நாடு போகிற போக்கைப் பார்க்கும்போது, குற்றச் செயல்கள் நிறைந்த சில தென்னமரிக்க நாடுகளைப் போன்று இலங்கையும் மாறி விடுமொ என்ற அச்சமும் ஏழாமலில்லை.