வவுனியாவில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர்? வீடு வீடாக சென்ற உறவினர்கள்….

வவுனியா – நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இளம் பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர் என பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு தினசரி நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழமை.

அதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்துச் சென்ற குறித்த பெண்ணை அவ் வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

அதையடுத்து குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் வைத்தியரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது உறவினர்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் இலட்சனை பொறிக்கப்பட்ட கடிதத்தில் “குறித்த வைத்தியர் கிராமத்திற்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். அவர் நல்லதொரு மனிதர் அவரின் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டவர்களினால் இவ்வாறான பொய்யான வதந்திகள் பரப்புகின்றனர். இக் கடிதத்தினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்” என எழுதி வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.

அயலவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் கையெழுத்திட்டோம் எனவும் நாங்கள் மனசார கையெழுத்திடவில்லை எனவும் கையெழுத்திட்ட சில பொதுமக்கள் தெரிவித்தனர்.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர் அரச வைத்தியசாலை எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் அல்ல, ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதி அற்றவர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை என வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.