1,000 ரூபாய் எடுக்கப் போனவருக்கு பணமழையாக பொழிந்த ஏடிஎம்: வங்கி அதிகாரிகள் செய்த அதிரடி செயல்!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்-மில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு அதிகமாக நான்கு மடங்கு பணம் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் சிட்கோ பகுதியில் பிரபல தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. பிராதன சாலையில் அமைந்திருக்கும் இந்த ஏடிஎம் மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.

இந்நிலையில், புதன்கிழமை (நேற்று) இரவு இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வாடிக்கையாளர்கள் பதிவு செய்த தொகையை விட மூன்று மடங்கு பணம் அவர்களின் கைகளுக்கு வந்துள்ளது. ‘டெபிட்’ அட்டை மூலம் ரூ 1,000 எடுத்தவருக்கு ரூ. 5 ஆயிரமும், ரூ.4 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.20 ஆயிரமும் வந்துள்ளது.

அதே நேரத்தில் அவர்களின் கணக்கில் பணம் குறைந்துள்ளதா? என்று சோதித்து பார்த்ததில் அதில் இவர்கள் பதிவு செய்த தொகை போக மீதம் இருந்த கணக்கை மட்டுமே ஏடிஎம் இயந்திரம் காட்டியுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், தங்களிடம் இருந்த டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்து முடிந்த வரை பணம் எடுக்க முயன்றுள்ளனர்.

இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதை அடுத்து பொதுமக்கள் பலரும் அந்த ஏடிஎம் மையத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாத காவல் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வங்கி நிர்வாகிகள் அந்த ஏடிஎம் மையத்தை உடனடியாக மூடி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.