நடிகர் விஜய்யின் செயலால் தான் அவமானப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது.
இதில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டு புகையை ஊதித்தள்ளும் காட்சி இடம்பெறுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வைரலாக்கியுள்ளனர். இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சர்கார் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்ட அவர், “நடிகர் விஜய் தனது அடுத்த படத்தின் போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன்.” என்றும் “அந்த சிகரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டெலாக இருப்பீர்கள்” என்றும் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது நடிகர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்ற விஜய் இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதி கூறினார்.
விஜய் தான் சொன்னதை வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு சிகரெட்டை புகையவிட்டுக்கொண்டு போஸ் கொடுத்திருப்பதால் அன்புமணி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சியில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியது பற்றி முன்னர் வெளியான செய்தியையும் சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இணைத்துக் காட்டும் போட்டோவையும் தனது ட்விட்டரில் அன்புமணி பதிவிட்டுள்ளார்.