உத்திரிபிரதேசத்தில் முஸ்லிம் நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் இந்து பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததையடுத்து து வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த முகமது அனஸ் சித்திக் – இந்து மதத்தை சேர்ந்த தன்வி செத் தம்பதியினருக்கு 6 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர்கள் நொய்டாவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் தம்பதியினர் பாஸ்போர்ட் வேண்டி லக்னோவிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விணப்பித்தனர்.
பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக நேற்று லக்னோவிலுள்ள அலுவலகத்திற்கு தன்வி சென்றுள்ளார். அங்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் பாஸ்போர்ட்டில் சிக்கல் உள்ளதாக பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா கூறியிருக்கிறார். மேலும், மிகவும் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்து தன்வி கூறுகையில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் என்னுடைய ஆவணங்களில் சிக்கல் உள்ளதாக அதிகாரி விகாஸ் மிஸ்ரா கூறினார். இன்னும் என்னுடைய பெயரை மட்டுமே வைத்துள்ளார். கணவர் பெயரை சேர்க்கவில்லை. எல்லோர் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தினார்.
போதிய ஆவணங்கள் இருந்தும் எனக்கு பாஸ்போர்ட் வழங்கவில்லை என தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது வைரலானதையடுத்து, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலையிட்டு, தம்பதியினருக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், இந்து-முஸ்லிம் தம்பதியினரை அவமானப்படுத்தியதாக கூறப்படும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்திடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது. அதேபோல், அதிகாரி விகாஸ் மிஸ்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.