பாலாஜி – நித்யா விவகாரம், மும்தாஜ் – நித்யா மோதல் ஆகிய இரு விஷயங்கள் தொடர்பான காட்சிகளும் சர்ச்சைகளும்தான் இதுவரையான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கும் பரபரப்பிற்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இரண்டிலுமே நித்யா இருக்கிறார் என்பது விநோதமான கோணம். ‘பிக்பாஸ் வீட்டில் சரியாக செயல்படாத இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் தலைவி ஜனனிக்கு வந்த போது அவர் தேர்ந்தெடுத்ததும் பாலாஜி – நித்யா ஆகிய இரு நபர்களையே. இவையெல்லாம் தற்செயலா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆக, பிக்பாஸின் இதுவரையான மைலேஜூக்கு பெரிதும் உதவியிருப்பவர் நித்யா. நித்யா பாலாஜி விவகாரத்தையும் மீறி, இன்றைய எபிசோடில் ஹிட் அடித்த விஷயம் ஜனனி ஐஷ்வர்யாவின் லிப்லாக் சம்பவம்
சில தருணங்களில் இணக்கமாக உரையாடும் பாலாஜியும் நித்யாவும் தனியான வேறு சந்தர்ப்பங்களில் சண்டைக்கோழிகளாக நிற்கும் முரணை புரிந்து கொள்வதும் சிரமமாக இருக்கிறது. பிடிவாதத்தின் மூலம் தன்னுடைய பிம்பத்தை கீழிறக்கிக் கொள்வதோடு, சக போட்டியாளர்களின் வெறுப்பையும் எளிதாக சம்பாதித்துக் கொள்கிறார் நித்யா. இதனால் தராசு பாலாஜியின் பக்கம் உயர்கிறது.
நான்காம் நாளின் சம்பவங்கள் இன்னமும் முடியவில்லை. ஜனனியும் வைஷ்ணவியும் ஆண் வேஷம் போட்டுக் கொண்டு உலவினார்கள். அதென்னமோ பெண்கள் ஆண் வேடம் அணிந்தால் அது பெரிதும் பொருந்தாமல் விநோதமாகவே இருக்கிறது.
‘சூரியன்’ திரைப்பட நகைச்சுவையின் ஒலி வந்தது. பொன்னம்பலமும் நித்யாவும் நீச்சல்குளத்தில் பத்துமுறை தள்ளிவிடப்பட வேண்டும். முறை வைத்து ஆளாளுக்கு தள்ளி விட்டார்கள். நித்யாவை பாலாஜியே ஒருமுறை உற்சாகமாக தள்ளி விட்டார். ‘ஸ்டன்ட்மேன்’ ஆன பொன்னம்பலமே சற்று தடுமாறினாலும் இந்த தண்டனையை நித்யா இயல்பாக கையாண்டார்.
கோழி சத்தம் கேட்டவுடன் ரித்விகா – சென்றாயனின் தலையில் முட்டையை உடைத்தனர். சமையலுக்கு முட்டை போதவில்லை என்கிற பஞ்சாயத்து ஒருபுறம். இன்னொரு பக்கம் இப்படி வீணாகும் முட்டைகள். ‘ஷாம்பு’ மாதிரி முட்டையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டார் சென்றாயன். சில நிமிடங்களில் மறுபடியும் ‘சூரியன்’ காமெடி சத்தம் ஒலிக்க, நீச்சல்குளத்தில் தள்ளிவிடும் வைபவம் மீண்டும் நிகழ்ந்தது.
இன்னொரு பக்கம், யாஷிகாவும் டேனியும் இணைந்து வெங்காயம் நறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். முட்டையும் வெங்காயமும் இணைந்து பிக்பாஸ் வீட்டை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. மறுபடியும் முட்டை உடைக்கும் நிகழ்ச்சி. ‘யார்லாம் இன்னும் உடைக்கலையோ, வந்து உடைங்க’ என்று சடங்கு செய்ய வந்த புரோகிதர் மாதிரி அழைத்துக் கொண்டிருந்தார்கள். வெங்காயம் நறுக்க கையில் வைத்திருந்த கத்தியோடு, சென்றாயனின் தலையில் யாஷிகா முட்டையை உடைக்க, சென்றாயனின் தலையில் சிறு காயம் ஏற்பட்டது போல. மனிதர் சற்று அலறி விட்டார்.