பாசம் வென்றது, பணியிட மாற்றம் நின்றது: ‘சாட்டை சமுத்திரக்கனி’ ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

ஆசிரியர் பணிக்கு இலக்கணமாக மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவராக தனது பணியைச் செய்த திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றத்தை மாணவர்களின் நெகிழ்ச்சியான எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது மாவட்ட கல்வித்துறை.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், வெளியகரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் குறைப்பு முடிவை மாவட்ட கல்வி நிர்வாகம் எடுத்ததால் பணியில் இளையவராக இருந்த ஆசிரியர் பகவான், சுகுணா என்ற இரண்டு பேரை இடமாற்றம் செய்தது மாவட்ட கல்வித்துறை.

இருவரையும் 35 கி.மீ. தூரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்தது. சாதாரணமாக நடக்கும் இடமாற்றம் தான். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் நடந்துகொண்டுத்தான் இருக்கிறது.

ஆனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் மாணவர்களின் அன்பினால் இன்று தமிழகம் தாண்டியும் பிரபல செய்தியாக வலம்வரத் தொடங்கியுள்ளது.

சினிமாவில் ஹீரோக்கள் ஆசிரியர்களாக நடித்தால் அவர்கள் முன்னுதாரண ஆசிரியராக இருப்பார்கள், ‘நூற்றுக்கு நூறு’ என்று ஜெய்சங்கர், லட்சுமி நடித்த திரைப்படம் 1970-ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப்படத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் ஜெய்சங்கர் மாணவர்களின் உள்ளம் கவர் ஆசிரியராக இருப்பார்.

தவறான மாணவி ஒருவரால் சிறை செல்லும் அவரை போலீஸார் கைது செய்து செல்லும்போது இடைமறிக்கும் மாணவர்களிடம் ஜெய்சங்கர் பேசும் வசனத்தைக் கேட்ட மாணவர்கள் கட்டுப்பட்டு ஒதுங்குவார்கள்.

அதே போன்று ‘சாட்டை’ படத்தில் ஆசிரியராக வரும் சமுத்திரக்கனி மாணவர்கள் குறித்த ஆசிரியர்கள் பார்வையை உடைப்பார். ஊக்கமும், புரிதலும் இருந்தால் யாரையும் தயார்படுத்தலாம் என்பதை உணர்த்துவார்.

காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துவார். ஆசிரியர் பணிக்கு எடுத்துக்காட்டாக பல படங்கள் வந்துள்ளன. நல்லாசிரியர் நல்ல சமுதாயத்தை உருவாக்குபவர்கள். இதற்கு எடுத்துக்காட்டாக நிஜ சம்பவம் ஒன்று நேற்று நடந்தது.

ஒரு ஆசிரியர் இடமாற்றத்தைக் கண்டித்துப் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களா? பள்ளிக்குப் பூட்டு போட்டார்களா? பள்ளிக்கு குழந்தைகளை இனி அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் சபதமெடுத்தார்களா? என்ற செய்தி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஆசிரியர் பகவான் இடமாறிச் செல்வதை மாணவ மாணவியர் தடுத்து நிறுத்தி கதறி அழுவதையும், அவரை கட்டிப்பிடித்து போகாதீர்கள் என கெஞ்சுவதையும், இதனால் ஆசிரியர் பகவான் அழுவதையும் காணொலியில் கண்ட பலரும் நெகிழ்ந்தனர். இவரல்லவா நல்லாசிரியர் என்றெல்லாம் புகழ்ந்தனர்.

47281  பாசம் வென்றது, பணியிட மாற்றம் நின்றது: ‘சாட்டை சமுத்திரக்கனி’ ஆசிரியருக்கு குவியும் பாராட்டு 47281ஆசிரியர் இடமாற்றத்தால் இரண்டு நாள், பள்ளியில் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினர். போராட்டம் குறித்து விளக்கம் கேட்டனர். பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு விவரமும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஆசிரியர் பகவானின் இடமாறுதல் உத்தரவை நிறுத்தி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால், இன்று முதல் பள்ளி வழக்கம்போல செயல்படத் தொடங்கியுள்ளது.

பகவான் ஆசிரியராக வந்த பின்னர் சாதாரண அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் பேசும் திறனும் பெற்றனர். 100 சதவிகித தேர்ச்சியையும் பெற்றனர்.

நட்பாகப் பழகி கல்வியைப் போதித்ததால் பள்ளி முழுவதும் பகவான் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். மாற்றம் வந்தபோது மாணவர்களில் பாசப்போரட்டம் அனைவரையும் அசைத்துப் பார்த்தது. பாசம் வென்றது, பணி மாறுதல் நின்றது.

Tamil The Hindu