உலக சாம்பியனின் தலையெழுத்து கடைசி நிமிடத்தில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெர்மனி அணி, இறுதி நொடிகளில் வெற்றியைத் தங்கள் வசப்படுத்தியுள்ளது.
ஜெர்மனி – ஸ்வீடன் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன்களுக்குச் சாதகமாக முடிந்தது.
மெக்சிகோ அணியுடனான முதல் போட்டியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த ஜெர்மனி அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார்.
அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி அணியின் டோனி குருஸ் 95-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.
இறுதியில், போட்டியின் முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது.
உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.