திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி பிக்பாஸ் இடையே என்ன பிரச்னை?
’பிக் பாஸ் ஷூட்டிங்கில் பெஃப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்துவதில்லை’ என்கிற பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் வீடு அமைந்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடிகர் கமல் கலந்து கொள்ளும் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பெஃப்சி தொழிலாளர்கள் புகுந்து ஷூட்டிங்கை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான `எண்டமால்’ நிறுவனமும் ஒரு உறுப்பினர் என்கிற முறையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் குஷ்பு தலையிட்டு, `பேசித் தீர்க்கலாம்’ என அப்போதைக்கு சமாதானம் செய்திருக்கிறார். ஆனாலும் பிரச்னை தீரவில்லை.
பெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ‘’பிக்பாஸ் முதல் சீசனின் போதே பெஃப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம்.
அப்போது ‘இது வித்தியாசமான செட் அப். தமிழ்நாட்டு டெக்னீஷியன்களுக்கு புடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம்.
அடுத்தடுத்த சீசன்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் தமிழ் சினிமாவிலிருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது.
ஆனால் இந்த சீசனில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்தாண்டை விட மோசமாக 10 சதவிகிதம் பேர் மட்டுமே பெஃப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது.
கேட்டதற்குச் சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதைப் பொதுவெளிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது.
அதிகப்படியாக பெஃப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக் கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நம்மூர் தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்னை?.
தமிழர்கள் நிகழ்ச்சியைக் கண்டு களித்து ஆதரவு தரவேண்டும், ஆனால் தமிழ் சினிமா ஆட்களுக்கு வேலை கிடையாது என்றால் என்ன அர்த்தம்?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காதபட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற அந்த 41 பேரும், (அதாவது நடிகர் கமல் உட்பட. அவரும் சம்மேளன உறுப்பினர்தான் என்கிறார்) அந்த ஷோவைப் புறக்கணிக்கலாமென நினைக்கிறோம்.
கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். பெஃப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக அவருக்குத் தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள்.
நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். சென்ற சீசனில் தலையிட்டது போல் இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளிப்பார் என நம்புகிறோம்’’ என்றார் செல்வமணி.
விஜய் டிவிக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியிருக்கும் பெஃப்சி, சொன்னதுபோல் நடந்து கொள்ளாததற்கு எண்டமால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தையும் வலியுறுத்தியுள்ளது.
நடவடிக்கை இல்லாத பட்சத்தில் சீரியல் படப்பிடிப்புகளும் பாதிப்பைச் சந்திக்கலாமெனத் தெரிகிறது. விஜய் டிவி தரப்போ, `எண்டமால் நிறுவனம் தொடர்ந்து பெஃப்சியிடம் பேசி வருகிறது. இந்தப் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும்’ என்கிறது.