கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை புறக்கணித்துச் சென்றபோது எனக்கு அழுகைதான் வந்தது என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மகள் தெரவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இரண்டு மணித்தியாலங்கள் கடிதம் கொடுப்பதற்காக நின்றுகொண்டிருந்தேன் ஆனால் ஜனாதிபதி அந்த இடத்தில் வைத்து எங்களைச் சந்திக்காமல் சென்று விட்டார், அந்த இடத்தில் எனக்கு அழுகைதான் வந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் வகையில் நவோதய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பொன்று கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின்போது, அரசயில் கைதி ஆனந்தசுதாகரனின் தாயார் மற்றும் அவரின் பிள்ளைகள் என்போர் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
தயவு செய்து எனது அப்பாவை பொதுமன்னிப்பு கொடுத்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் தாழ்மையுடன் கேட்கின்றேன் எனவும் ஆனந்தசுதாகரனின் மகள் இதன்போது உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும், இந்த சிறுவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்திற்கொண்டு ஆனந்தசுதாகரனிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என இங்கு கலந்து கொண்டிருந்த அனைவரும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.