ஏ- –32 வீதியால் பயணிக்கும் அனைவரும் பார்க்கும் காட்சி வீதியோரத்தில் வைத்து விற்கப்படும் பாலைப் பழங்கள். அவற்றை விற்போர் பெரும்பாலும் குடும்பத்தைத் தலைமைதாங்கும் பெண்களே.
வீதியில் வாகனங்கள் வரும்போது பைகளில் உள்ள பாலைப் பழங்களைக் காட்டுகின்றனர். பெரும்பாலான வாகனங்கள் அவர்களைப் பொருட்படுத்தாது சென்று விடுகின்றன.
கடந்து செல்லும் வாகனங்களை ஏமாற்றத்துடன் நோக்கியவாறு அவர்கள் அடுத்த வாகனத்தை எதிர்பார்த்து வீதியோரத்தில் காத்திருக்கின்றனர்.
அந்தப் பெண்களில் பலர் போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். போரில் கணவனை இழந்தவர்களும், கணவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் என்று அவர்கள் ஒவ்வொருவரிடமும் போரின் வடு பதிந்துள்ளது.
இறுதிப் போரில் கணவர் காணாமல்போக மகனின் கல்விக்காக வீதியில் கால் கடுக்க நின்று பாலைப் பழம் விற்கின்றார் 55 வயதுத் தாய் ஒருவர்.
அவரிடம் சிறிது பேசவும் கண்கலங்குகின்றார். ‘‘ஒருவரும் உதவி இல்லை. 15 வயது மகனின் கல்விக்காக வட்டக்கச்சியில் இருந்து வந்து, இப்படிப் பாலைப் பழங்கள் விற்கின்றேன்’’ என்று அவர் கண்கலங்கினார்.
எங்களுக்கு யாரும் உதவிகள் வழங்கினால் இப்படி வீதியில் நிற்க வேண்டி இருக்காது. நாங்கள் சுயமாக உழைப்பதற்காக வழிவகைகளை யாரேனும் ஏற்படுத்தித் தந்தால் கோடி புண்ணியமாக இருக்
கும் என்று அவர் ஆதங்கத்துடன் கூறினார்.
இப்படி அந்த வீதியில் நெடுகிலும் பாலைப் பழங்களுடன் நிற்கும் ஒவ்வொரு பெண்களிடத்திலும் ஒவ்வொரு சோகப் பின்னணி உண்டு.
எப்படியாவது சுயமாக உழைத்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் உணர்வுகளை அடக்கித் தமக்கு உதவிகள் ஏதும் கிட்டாதா என்ற ஏக்கத்துடன் அவர்கள் வீதியில் கால்கடுக்க நிற்கின்றனர்.