முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் கிளை மோர் குண்டுகள், புலிக்கொடிகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்று பொலிஸாரின் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அது பற்றிய முழுமையான அறிக்கை பாது காப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் நேற்றுமுன்தினம் 4 பேரும் நேற்றுமாலை ஒருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸார் ஓட்டோவைச் சோதனையிட்டனர். அதில் புலிக்கொடிகள், சீருடைகள், 20 கிலோகிராம் கிளைமோர் குண்டு, அதை இயக்கும் ரிமோட் கருவிகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
சம்பவ இடத்தில் வைத்து ஓட்டோ சாரதி கைது செய்யப்பட்ட அதில் பயணித்த இருவர் தப்பியோடியிருந்த நிலையில் பின்னர் வெவ்வேறு இடங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் இருவரும் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் நேற்று ஒருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றுக் கைது செய்யப்பட்டவருக்கு ஒரு கை இல்லை.
அவர்களில் சிலர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்துள்ளனர். சிலர் இராணுவத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ளனர். ஒருவருக்கு இராணுவத்தினரால் மாதாந்தம் பணம் வழங்கப்படுகின்றமையும் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களில் ஒருவர் புதுக்குடியிருப்பில் வாகனத் திருத்தகம் நடத்துபவர்.
மற்றொருவருக்கு, சந்தேகநபர்களில் 55 வயதுடைய ஒருவர் போலி அடையாள அட்டை செய்து வழங்கியுள்ளார். அதில் பெயர் உள்ளிட்ட தரவுகள் மாற்றப்பட்டுள்ளன. போலியான தரவுகளை உண்மைபோல்காட்டிப் பெற்ற போலியான அடையாள அட்டையைக் கொண்டு வங்கிக் கணக்கு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு அதற்கு வெளிநாடு ஒன்றிலிருந்து பணம் அனுப்பப்பட்டு வருகின்றது.
வெளிநாட்டில் உள்ளவர்களில் புலிகளின் முக்கிய சில நபர்கள் மீது குற்றஞ்சாட்டி அவர்களே இங்குள்ளவர்களுக்குத் தகவல் வழங்கி ஆயுதங்கள் எடுத்திருக்கலாம் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் புலன்விசாரணையில் தெரியவந்துள்ளன.
கைதானவர்களுக்கும் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமைச்சுக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.