“இயர்போனுக்கெல்லாம் ரொம்ப செலவு பண்ணாதீங்க பாஸ்… ஐநூறு ரூபாய்க்குள்ள வாங்குங்க” என்றோ “ரிச்சி ஸ்ட்ரீட் போனா இருபது ரூபாய்க்கு கை நிறைய அள்ளிட்டு வரலாம்”னோ நம்மைச்சுற்றி யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம்.
ஆனால் கோடி ரூபாய்க்குக் கூட ஹெட்போன்களும் பல லட்ச ரூபாயில் இயர்போன்களும் சந்தையில் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா. லட்சங்களில் விலை கொடுத்து கூட இசையைக் கேட்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். இவ்வளவு விலை கொண்ட ஹெட்போன்களில் என்ன ஸ்பெஷல்?
Utopia by Tournaire
Focal நிறுவனத்தால் கடந்த 2016-ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹெட்போன் உலகிலேயே விலை உயர்ந்த ஒன்று. அறிமுகப்படுத்தப்படும் போது இதன் விலை £120,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் கொஞ்சம் அதிகம்.
ஹெட்போனைச் சுற்றிலும் 18 கேரட் தங்கம் மற்றும் அதில் பதிக்கப்பட்டிருக்கும் 6.5 கேரட் வைரம் ஆகிய இரண்டும்தான் இதன் விலைக்கு மிக முக்கிய காரணம். விலைக்குத் தகுந்த ஆடியோ குவாலிட்டியை பெற முடியும் என உத்திரவாதம் அளிக்கிறது இதைத் தயாரிக்கும் நிறுவனம்.
இப்பொழுது சற்று விலை குறைந்திருக்கும். இதை 78 லட்ச ரூபாய்க்கு வாங்கலாம். கூடவே இதை வைப்பதற்கு ஒரு ஸ்டேன்ட் வேண்டுமென்றால் 86 லட்ச ரூபாய்.
Onkyo H900M Diamond
முன்னதைப் போல் தங்கத்தில் அதிகமாகக் கவனத்தை செலுத்தாமல் முழுவதும் வைரத்தை மட்டுமே அதிகமாகக் பயன்படுத்தி இந்த ஹெட்போன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயர்போனின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட்களில் பதிக்கப்பட்டிருக்கும் சிறு சிறு வைரங்களின் அளவே 20 கேரட் இருக்கும். 60 லட்ச ரூபாய்க்கு இது அறிமுகப்படுத்தப்பட்டது.
Sennheiser HE 1-Orpheus
ஆடியோ குவாலிட்டிக்கு உலக அளவில் பெயர் பெற்ற Sennheiser நிறுவனம் இந்த ஹெட்போனை உருவாக்கியிருக்கிறது. 1991-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட Orpheus என்ற தயாரிப்பை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறது அந்த நிறுவனம்.
இதன் கட்டமைப்புதான் இதை மற்ற ஹெட்போன்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது. மற்றவை போல இல்லாமல் சற்று வித்தியாசமாக மார்பிள் கல்லில் இதன் ஆம்ளிபையர் பாகங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வருடம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும் போது இதன் விலை நாற்பது லட்சம் ரூபாய்.
கிட்டதட்ட 15 வருடங்களுக்கு மேல் இந்த ஹெட்போனை உருவாக்கச் செலவிட்டிருப்பதாக கூறும் இந்த நிறுவனம் பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகே இதை வடிவமைத்திருக்கிறது.
ஏனென்றால் பழைய தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து மேம்பட்ட ஆடியோ குவாலிட்டியை தருவது சற்று கடினமான விஷயம்தான். இந்தியாவில் ஓர் இணையதளம் இதற்கான ப்ரீ ஆர்டர் வசதியைத் தருகிறது விலைதான் கொஞ்சம் அதிகம் 3,599,900 ரூபாய் அதாவது 36 லட்ச ரூபாய்க்கு நூறு ரூபாய் குறைவு.
இவையெல்லாம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய ஹெட்போன்கள் மட்டும்தான். இது தவிர சில லட்ச ரூபாய்களில் இயர்போன்கள் சந்தையில் பல இருக்கின்றன. ஆனா ஒன்னு பாஸ் இத வாங்குனா கூடப் பரவாயில்லை அது எல்லாத்துக்கும் மேல “எவ்ளோ ரூபா குடுத்து வாங்குனாலும் ஒரே பாட்டுதான கேக்க போறீங்க”னு சொல்லிக்கிட்டு ஒரு குரூப் ஒண்ணு சுத்திகிட்டு இருக்கும் அவங்க கண்ணுல மட்டும் சிக்கிராதீங்க.