நாட்டிற்கு தேவையானது ஹிட்லரும், சர்வாதிகார ஆட்சியுமா?

நாட்டுக்கு ஹிட்லர் ஒருவர் தேவையில்லையெனவும், செயலாற்றமிக்க ஒரு யுகமே நாட்டுக்கு தேவைப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுர குடாவௌ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறுதெரிவித்தார். “இந்நாட்டுக்கு ஹிட்லர் ஒருவர் தேவையென்ற கருத்தை அண்மைக்காலமாக எம்மால் செவிமடுக்க முடிந்தது.

இன்னும் சிலர் சொல்கின்றார்கள் ஹிட்லர் வேண்டாம் முசோலினிதான் வேண்டுமென்று, ஏனையோர் ஹிட்லரும் வேண்டாம், முசோலினியும் வேண்டாம் எமக்கு இடியமின் தான் வேண்டுமென்று சொல்கின்றார்கள்.

இந்நாடு பயணிக்க வேண்டிய நோக்கினையும், கொள்கையையும் பார்க்கும்போது, இதெல்லாம் வெட்கமில்லாத பேச்சுக்கள். ஹிட்லர் என்ன செய்தார். பல்லாயிரக்கணக்கானோரை விஷ வாயு வைத்து கொன்று குவித்தார்.

அதுதான் அவரது சாதனை. இப்போது எமது நாட்டுக்கு இவ்வாறான ஒரு கொடூர தலைவரா தேவை? இவ்வாறான ஒரு சர்வாதிகாரியா தேவை? சிந்தியுங்கள் என அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அநுராதபுரம் குடாவௌ சததினுகம, ஜன்மசமருகம, ஜன்ம அபிமானிகம, ஆகிய எழுச்சி கிராமங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 94 வது பிறந்த தினம் மற்றும் தேசிய வீடமைப்பு திட்டத்தை முன்னிட்டு இக்கிராமம் மக்களுக்காக கையளிக்கப்பட்டது.

சததினுகம 25 வீடுகளை கொண்டதாகவும் ஜென்ம சமருகம 33 வீடுகளை கொண்டதாகவும் ஜென்ம அபிமானிகம 39 வீடுகளை கொண்ட்தாகவும் அமைந்துள்ளது. ஆயிரத்து 81 இலட்சம் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

அமைச்சர்களான பி.ஹரிசன், சந்திராணி பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான, இஷாக் ரஹ்மான், சந்திம கமகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.