ஹிட்லர் ஆட்சியமைக்க வேண்டுமென புத்த பெருமான் ஒருநாளும் கூறவில்லை!

பௌத்த தர்மத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் பிறந்த தின வைபவத்தில் பங்கேற்ற சங்கைக்குரிய வெண்டறுவே உபாலி அனுநாயக்க தேரர் முன்வைத்த கருத்து தொடர்பாவே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“புத்த பெருமான் ஒருபோதும் ஏகாதிபத்தியத்தைப் போதிக்கவில்லை. ஒற்றுமை, சமாதானம், சமாதானமாக கலந்துரையாடுதல் போன்ற விடயங்களையே போதித்திருக்கின்றார்.

ஹிட்லர் போன்றவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று புத்த பெருமான் எந்த இடத்திலும் கூறவில்லை.

ஜேர்மனியிலும் கூட 19ம் நூற்றாண்டில் பௌத்த கருத்துக்களை முன்வைக்கும் ஒரு அமைப்பு உருவானது. அதன் அங்கத்தவர்கள் கூண்டில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

அது ஹிட்லரினால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். இவ்வாறு இருக்க ஹிட்லர் போன்றவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்று அனுநாயக்க தேரர் கூறுவது கவலைக்குரிய விடயமாகும்.

இது போன்ற ஒரு கூற்றை நாம் கூறியிருந்தால் இன்று ஊடகங்கள் எங்களை கேள்விகளால் துளைத்திருக்கும்.

ஹிட்லர் போன்றவர் ஆட்சிக்கு வந்தால் ஊடகங்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.