சென்னை மயிலாப்பூரில் அக்காளுக்கு கீரையிலும், அக்காளின் கணவருக்கு மதுபானத்திலும் விஷம் கலந்து கொலை செய்ததாக கைதான இளம்பெண், போலீஸிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரின் மனைவி மீனாட்சி. இருவரும் அந்தப்பகுதியில் பூ வியாபாரம் செய்துவருகின்றனர். இவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. மீனாட்சியின் தங்கை மைதிலி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. மைதிலிக்கும் அவரின் கணவருக்கும் அதிக வயது வித்தியாசம். இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மைதிலியின் உறவினர் பாலமுருகன். இவர், பூக்கடையில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், கடந்த 2017 ஜனவரி 9-ம் தேதி தர்மலிங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரைத் தொடர்ந்து மீனாட்சியும் நான்கு நாள்களுக்குப் பிறகு மரணமடைந்தார். இதனால் இருவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால், இறப்புக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனால் புகார் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில், மயிலாப்பூர் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா மற்றும் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீஸார், தர்மலிங்கம், மீனாட்சியின் மரணம் குறித்து விசாரித்தனர். இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்று போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இருவரின் உடலிலும் விஷம் கலந்திருப்பதாகவும் மரணத்துக்கு அதுவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக போலீஸார் மரணத்துக்கான காரணம் குறித்து தர்மலிங்கம், மீனாட்சியின் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது மைதிலி குறித்து முக்கியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது மைதிலியும், பாலமுருகனும் சிக்கிக் கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் தர்மலிங்கத்துக்கும் மீனாட்சிக்கும் விஷம் வைத்து கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓராண்டும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தக் கொலையை போலீஸார் துரிதமாக செயல்பட்டு துப்பு துலக்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தர்மலிங்கமும் மீனாட்சியும் வசதியாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடம் 18,50,000 ரூபாய் இருந்துள்ளது. இதுதவிர சொத்துகளும் உள்ளன. மீனாட்சியின் தங்கை மைதிலி, கணவரைப்பிரிந்து இவர்களுடன் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்துள்ளார். அப்போதுதான் மைதிலிக்கு தம்பி உறவு முறை வரும் பாலமுருகன், பூக்கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். மைதிலிக்கும் பாலமுருகனுக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. அதை தர்மலிங்கமும் மீனாட்சியும் கண்டித்துள்ளனர். அதன்பிறகும் இருவரின் நட்பு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், மைதிலியின் 15 வயது மகளை, பாலமுருகனுக்கு திருமணம் செய்து கொடுக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதற்கு ஓட்டுமொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்போது பாலமுருகனை தர்மலிங்கம் தாக்கியுள்ளார். இதனால், பழிக்குப்பழி வாங்கவும், அவர்களின் சொத்துகளை அபகரிக்கவும் மைதிலியும் பாலமுருகனும் திட்டமிட்டனர். ஏற்கெனவே குடிப்பழக்கம் உடைய தர்மலிங்கத்துக்கு மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் சமைத்த கீரை, பாகற்காய் பொரியலிலும் விஷம் கலந்து அதை மீனாட்சியை சாப்பிட்ட வைத்துள்ளனர். இதனால் இருவரும் ரத்த வாந்தி எடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் தர்மலிங்கமும், அடுத்து மீனாட்சியும் இறந்துள்ளனர்.
அவர்களின் இறுதிச்சடங்கு நடந்தபோதுகூட மற்றவர்களைப் போல மைதிலியும் பாலமுருகனும் அழுது நடித்துள்ளனர். அதன்பிறகு, தர்மலிங்கம், மீனாட்சியிடம் இருந்த 18,50,000 ரூபாயை மைதிலி எடுத்துள்ளார். அதுபோல சொத்துகளையும் உயில் மூலம் மாற்றியுள்ளார். இதுதான் உறவினர்களுக்கு மைதிலி, பாலமுருகன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆதாரமில்லாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் மரணத்துக்கு காரணம் விஷம் என்று தெரிந்தபிறகுகூட உடனடியாக எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. தொடர்ந்து மைதிலியிடமும் பாலமுருகனிடமும் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினோம். அப்போது அவர்கள் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். அதன்பிறகே அவர்களைக் கைதுசெய்துள்ளோம்” என்றனர்.