தமிழகத்தில் தபால் துறையின் அஜாக்கிரதையால் ஏழை மாணவனின் மருத்துவர் கனவு தகர்ந்து போயுள்ளது.
சிவங்கங்கை மாவட்டம் காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரது மகன் வசந்த், பன்னிரெண்டாம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்றார்.
ஓ.பி.சி, பிரிவினர் 96 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்பதால், மருத்துவ படிப்பு எளிதில் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்தார்.
மருத்துவப்படிப்பு விண்ணப்பத்தை ஜூன் 19-க்குள் சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 14-ஆம் திகதி காஞ்சிரங்கால் கிளை தபால் நிலையத்தில் விரைவு தபால் மூலம் அனுப்பியுள்ளார்.
ஆனால் விண்ணப்பமானது 9 நாட்கள் தாமதமாக ஜூன் 23-ஆம் திகதி இயக்குனரகத்திற்கு சென்றதால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன், இது குறித்து விசாரித்த போது, தபால் மிகவும் தாமதமாக அங்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவர் ஆகவேண்டும் என்று இருந்த ஏழை மாணவனின் கனவும் தற்போது தபால் நிலையத்தின் அஜாக்கிரதையால் தகர்ந்து போயுள்ளது.
இது குறித்து வசந்த் தாயார் ஞானஜோதி கூறுகையில், நாங்கள் விண்ணப்பம் குறித்து இணையத்தில் பார்த்த போது, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வந்தது.
அதன் பின் விசாரித்த போது தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது. தபால் துறையினர் தாமதாம அனுப்பி என் மகனின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டனர் என்று வேதனைப்பட்டுள்ளார்.
தபால்நிலைய அதிகாரி திருக்குமரன் கூறுகையில், விரைவுத் தபாலை பதிவு செய்த ஊழியர் தவறு செய்துள்ளார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.