மைக்கல் ஜாக்சன் தி கிங் ஆப் பாப், மூன் வாக்கர் என்று ரசிகர்களால் பிரபலமாக அறியப்பட்டவர். பாடுவது என்பதை தாண்டி, தனக்கான ஒரு தனி நடன பாணியை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான தனி அடையாளத்தை, ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.
எவ்வளவுக்கு எவ்வளவு புகழ்ச்சி அடைந்தாரோ, அதே அளவுக்கு இகழ்ச்சியும் கண்ட கலைஞன் மைக்கல் ஜாக்சன்.
பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை, சரும பிரச்சனைகளால் கடைசி நாட்களில் மறைந்து வாழ்ந்த தருணங்கள்., மத மாற்றம் செய்துக் கொண்டதாக வெளியான தகவல்கள், சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு என பலவகைகளில் தன் புகழை தானே கொஞ்சம், கொஞ்சமாக இழந்தார்.
2000களில் இவர் பெரிதாக தலைக்காட்டவில்லை. ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார் மைக்கல் ஜாக்சன். ஜாக்சன் எடுத்துக் கொண்ட அந்த இடைவேளையில் பல காளான்கள் முளைத்திருந்தன.
அவர்களுக்கு எல்லாம் ஜாக்சனின் கம் பேக் வயிற்றில் புளியை கரைத்திருக்கும். தனது இசை கச்சேரிக்காக ரிஹர்சல் செய்துவிட்டு வீடு திரும்பி உறங்கியவர் மீண்டும் கண்விழிக்கவே இல்லை.
ஜூன் 25, 2009 பாப் இசை உலகின் கறுப்புநாள் என்றே குறிப்பிடலாம். ஜாக்சன் கடைசியாக ரிஹர்சல் செய்துக் கொண்டிருந்த போது கூட ஆரோக்கியமாக, நன்கு நடனம் ஆடிக்கொண்டு தானே இருந்தார்.
ஜூன் 24, 2009 மதியம் 12 மணி இடம்: லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா தனது மேன்ஷன் உள்ளே திஸ் இஸ் இட் என்று பெயர் சூட்டப்பட்ட தனது இசை நிகழ்ச்சி ஒத்திகைக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்.
மேலும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். திஸ் இஸ் இட் என்ற இந்த இசை நிகழ்ச்சி ஜூலை 13, 2009ல் லண்டனில் நடைப்பெறுவதாக இருந்தது. சரியாக, அந்த நிகழ்ச்சிக்கு ஓரிரு வாரங்களுக்கு முன் மைக்கல் ஜாக்சன் மரணமடைந்தார்.
சில மணி நேரங்களில்… தனது மேன்ஷனில் திஸ் இஸ் இட் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு வேலைகளை கவனித்த மைக்கல் ஜாக்சன். அடுத்த சில மணி நேரங்களில் தி ஸ்டாப்பில் செண்டர் என்ற இடத்திற்கு சென்றார்.
இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு இடமாகும். இங்கு தான் தனது இசை நிகழ்சிக்காக ஒத்திகை பார்க்க துவங்கினார் மைக்கல் ஜாக்சன்.
இசை அமைப்பாளர்! மைக்கல் ஜாக்சனின் கடைசி இசை நிகழ்ச்சியாக இருந்திருக்க வேண்டியது திஸ் இஸ் இட் இசை நிகழ்ச்சி. அன்று கடைசியாக ஜாக்சன் ஒத்திகை பார்க்க வந்திருந்த போது, அந்த நிகழ்ச்சியின் இசை அமைப்பாளர் மைக்கல் பியர்டனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 25, 2009 நேரம் நள்ளிரவு 12 மணி
இடம்: தி ஸ்டாப்பில் செண்டர். தி ஸ்டாப்பில் செண்டரில் திஸ் இஸ் இட் நிகழ்ச்சிக்கான ஒத்திகை முடித்துக் கொண்டு நள்ளிரவு 12 மணி அளவில் புறப்பட்டு செல்கிறார் மைக்கல் ஜாக்சன்.
தனது மேன்ஷனை (வீடு) அடைந்த உடன், தனது சிறப்பு மருத்துவரிடம் அனஸ்தடிக் ப்ரோபோஃபோல் (Anaesthetic Propofol) என்ற மருந்தை அளிக்கும்படி கேட்கிறார் மைக்கல் ஜாக்சன்.
நேரம் 1:30 நள்ளிரவு
இறப்பதற்கு முன் சில வருடங்களாக மைக்கல் ஜாக்சன் தூக்கமினை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். ஜாக்சனின் மருத்துவர் அவரை உறங்க வைக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. பிறகு 10 மில்லிகிராம் வலியூம் (Valium)என்ற மாத்திரையை ஜாக்சனுக்கு அளிக்கிறார்.
நேரம் 2:00 மணி
அந்த மாத்திரையும் ஜாக்சனுக்கு அந்த பலனும் அளிக்காத காரணத்தால். Ativan எனும் ஆண்டி-அனெக்ஸிட்டி மருந்தை ஐ.வி மூலம் அளிக்கிறார் நேரம் மூன்றை கடந்துவிட்டது. ஆனால், இன்னும் மைக்கல் ஜாக்சன் உறங்கவில்லை. உறக்கத்திற்காக போராடி வருகிறார் மைக்கல் ஜாக்சன்.
3:00 மணி
நேரம் மூன்றை கடந்துவிட்டது. ஆனால், மைக்கல் ஜாக்சன் இன்னும் உறங்கவில்லை. மருத்துவர் அவரை உறங்க வைக்க வெவ்வேறு தூக்க மருந்துகளை அளித்து பார்க்கிறார். ஆனால், எந்த பயனுமில்லை. ஆனால், ஜாக்சன் ஆரம்பத்தில் இருந்த அனஸ்தடிக் ப்ரோபோஃபோல் தனக்கு அளிக்குமாறு மருத்துவரை வலியுறுத்துகிறார்.
ஏறத்தாழ முந்தைய நாள் (ஜூன் 24) மதியம் 12 மணியளவில் ஒத்திகை பார்க்க துவங்கி. 12 மணிநேரம் ஒத்திகை பார்த்த பிறகு… நள்ளிரவு வீடு திரும்பிய மைக்கல் ஜாக்சன். மறுநாள் (ஜூன் 25) காலை 10:40 மணி வரையிலும் உறக்கமின்றி அவதிப்பட்டு வருகிறார்.கடைசியாக வேறு வழியின்றி மைக்கல் ஜாக்சன் கேட்டுக்கொண்ட படி 25 மில்லிகிராம் அனஸ்தடிக் ப்ரோபோஃபோல் மருந்தை மைக்கல் ஜாக்சனுக்கு அளிக்கிறார் மருத்துவர்.உறக்கம்!
மருத்துவர் அனஸ்தடிக் ப்ரோபோஃபோல் அளித்தவுடன் உறங்கிவிடுகிறார் மைக்கல் ஜாக்சன். அடுத்த பத்து நிமிடம் கழித்து மைக்கல் ஜாக்சன் உறங்குவதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு மருத்துவர் கழிவறை செல்கிறார்.
சில நமிடங்கள் கழித்து மருத்துவர் திரும்பி வந்து பார்க்கும் போது மைக்கல் ஜாக்சன் மூச்சு விடாமல் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போகிறார்.
மதியம் 2:26 மணி
பிறகு மருத்துவர் சி.பி.ஆர் முறையில் மைக்கல் ஜாக்சனுக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார். பிறகு மதியம் 2:26 மணியளவில் மைக்கல் ஜாக்சன் இறந்துவிட்டார் என்பதை உக்லா (UCLA) மருத்துவ மையத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக மருத்துவர் உலகிற்கு அறிவித்தார்.
பலரும் மைக்கலின் மரணம் இயக்கையானது, எதிர்பாராதது போல கூற ஆரம்பத்தார்கள். ஆனால், ஏறத்தாழ 9 வருடங்கள் கழிந்த பிறகும், இன்னும் மைக்கல் ஜாக்சனின் மரணம் குறித்த மர்மங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.