அமெரிக்கா பேரவையில் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி- இலங்கையைப் பொறுத்தவரை ஜெனீவா என்பது இனிமேல் அழுத்தங்களைக் கொடுக்கும் களமாக நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.
அமெரிக்கா வெளியேறியுள்ளது இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைக்கும் என்று பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
அது, அமெரிக்கா ஏற்கனவே அரசாங்கத்துக்கு கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் கூறப்பட்ட அனுமானமே தவிர, இருதரப்பு உறவுகளையும் முன்னிறுத்தி பார்க்கப்பட்ட விடயமன்று
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள எடுத்துள்ள முடிவு உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை வொஷிங்டனில், அமெரிக்காவின் இந்த முடிவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பம்பியோவுடன் இணைந்து அறிவித்திருந்தார், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே.
இதனை அமெரிக்கா எடுத்த திடீர் முடிவென்று கூறமுடியாது. ஏற்கனவே, டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் இடம்பெற்றன.
அப்போதே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை குறித்து ட்ரம்ப் நிர்வாகம், அதிருப்தியான கருத்துக்களையே வெளியிட்டது.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகளை மீறுபவர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
அதுமாத்திரமன்றி, இஸ்ரேலுக்கு எதிரான போக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து வெளிப்படுத்தினால், பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறி விடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இப்போது அந்த எச்சரிக்கை தான் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதே, அதில் அங்கம் வகிக்க அமெரிக்கா மறுத்து விட்டது. இப்போது, ஆட்சியில் உள்ள குடியரசுக் கட்சி தான் அப்போதும் ஆட்சியில் இருந்தது.
2009ஆம் ஆண்டு ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொள்ள அமெரிக்கா முடிவு செய்தது.
2012இல் தான், அமெரிக்கா முதல் முறையாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாகத் தெரிவு செய்யப்பட்டது. சரியாக, ஆறு ஆண்டுகள் கழித்து, பேரவையில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது.
மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாக அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளுடன் பிரச்சினைகள் உள்ளன. அதன் தொடர்ச்சியாகவும், இஸ்ரேல் மீதான தொடர் நடவடிக்கைகளின் வெளிப்பாடாகவும், குடியரசுக் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கையின் பிரதிபலிப்பாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து, அமெரிக்கா வெளியேறியுள்ளதானது, சர்வதேச அரசியலில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகளைப் போலவே, இலங்கை விவகாரத்திலும் இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏனென்றால், 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக நுழைந்த காலப்பகுதியில் இருந்தே, இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் முன்னிலைப்படுத்தி வந்தது அமெரிக்கா.
2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன், இலங்கையில் போரின்போது நடந்த மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்ற ஐரோப்பிய நாடுகள் முற்பட்டன.
ஆனால் கடைசியில், அந்த முயற்சி தோல்வி கண்டதுடன், இலங்கை அரசாங்கம் அதனை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது. போரில் வென்ற இலங்கையைப் பாராட்டும் தீர்மானமே அதில் நிறைவேற்றப்பட்டது.
அப்போதைய தோல்விக்கு அமெரிக்கா போன்ற வலிமையான நாடு ஒன்று அந்த முயற்சியை முன்னெடுக்காதமை காரணமாக கூறப்பட்டது.
அப்போது அமெரிக்கா பேரவையில் இடம்பெற்றிருக்கவில்லை.
2011ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த மீறல்கள் குறித்து விசாரிக்கக் கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர கனடா முற்பட்டது. அதற்கான தீர்மான வரைவு ஒன்றையும் கனடா உறுப்பு நாடுகளிடம் கையளித்தது.
எனினும், கனடாவின் அந்த முயற்சிக்குப் போதிய ஆதரவு கிட்டாத நிலையில், அது விவாதத்துக்கே எடுக்கப்படவில்லை. அப்போதும் அமெரிக்கா போன்ற வலுவான நாடு ஒன்றின் தேவை உணரப்பட்டது.
2012 இல் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா முன்வைக்கப் போகிறது என்றதும் தான் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.
அதுவரையில் இந்தத் தீர்மானம் வெற்றி பெறுமா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்தன.
அமெரிக்கா 2012, 2013, 2015, 2017 என்று நான்கு தீர்மானங்களை ஜெனீவாவில் கொண்டு வந்திருந்தது. அதில், கடைசித் தீர்மானம் மாத்திரம் இலங்கையின் இணைஅனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டது.
முதலாவது தீர்மானத்தை இலங்கை எதிர்த்த போதும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த இலங்கை அரசாங்கம், அதனை நிறைவேற்றவில்லை.
அதுபோலவே, 2015ஆம் ஆண்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, 2017இல் இலங்கை அரசாங்கம் இணங்கியது. ஆனாலும் இன்னமும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உருப்படியான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அதற்கிடையில், ஆட்சிமாற்றத்தை அடுத்து, இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன, முன்னர் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுப்பதில் ஆர்வம் காட்டிய அமெரிக்கா, அண்மைக்காலமாக, இலங்கையை அரவணைத்துப் போகத் தொடங்கியுள்ளது.
இதனால், இலங்கை தனது கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்து விலகத் தொடங்கியது.
அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அமெரிக்கா கடும்போக்கை வெளிப்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு ரீதியான கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் பலமடைந்து வந்த கட்டத்தில், ஜெனீவா நகர்வுகள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரும் என்ற கேள்விகள் எழத் தொடங்கின.
ஏனென்றால், ஜெனீவாவில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இருந்த அமெரிக்கா, ஆதரிக்கும் -அரவணைக்கும் தரப்பாக மாறத் தொடங்கிய நிலையில், ஜெனீவா பொறிமுறைகளின் ஊடாக தமிழர்கள் நீதியைப் பெற்றுக் கொள்வது சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்தது.
இத்தகையதொரு சூழ்நிலையில் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறியிருக்கிறது அமெரிக்கா.
இது ஜெனீவா தீர்மானங்களை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக தமிழர் தரப்பில் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுவரை அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இருந்து வந்த அமெரிக்கா இனிமேலும் அந்த நிலைப்பாட்டில் தொடரும் என்பது உறுதியாக இருந்தால் தான், இது தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிர்ச்சியடைய வேண்டிய விடயம்.
2017 தீர்மானம் உண்மையில் தமிழர் தரப்புக்கு ஏற்புடைய ஒன்றாக இருக்கவில்லை. வேறு வழியில்லாத நிலையில் அதற்குத் தலையாட்டும் நிலையே ஏற்பட்டது.
ஏனென்றால், அந்த இணக்கப்பாட்டுத் தீர்மானம், நிச்சயமாக ஐ.நா எதிர்பார்த்த கலப்பு விசாரணைப் பொறிமுறையையோ, தமிழர்கள் எதிர்பார்த்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையையோ உருவாக்கும் ஒன்றாக இருக்கவில்லை.
ஜெனீவாவில் ஏற்றுக் கொண்ட கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் கடப்பாட்டில் இருந்து விலகிச் சென்ற இலங்கையை அழுத்திப் பிடிக்கும் வேலையைக் கூட அமெரிக்கா செய்யவில்லை.
இப்படியான நிலையில், 2019 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றி விட்டு இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் முன்பாக வந்து நிற்கப் போவதில்லை.
குறிப்பாக பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கையைப் பிசைந்து கொண்டு தான் நிற்கப் போகிறது.
அந்தக் கட்டத்தில் கூட அமெரிக்கா இன்னொரு தீர்மானத்தின் ஊடாக நீதியை நிலைநாட்ட முற்படும் என்ற நம்பிக்கை பலரிடம் இல்லாமலேயே போயிருக்கிறது.
ஏனென்றால், அமெரிக்க – இலங்கை உறவுகள் வலுவடைந்துள்ள சூழலில் அத்தகையதொரு நகர்வை அமெரிக்கா எடுக்க முற்படுவதற்கு வாய்ப்புகள் அரிது.
ஆக, அமெரிக்கா பேரவையில் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி- இலங்கையைப் பொறுத்தவரை ஜெனீவா என்பது இனிமேல் அழுத்தங்களைக் கொடுக்கும் களமாக நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.
அமெரிக்கா வெளியேறியுள்ளது இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைக்கும் என்று பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
அது, அமெரிக்கா ஏற்கனவே அரசாங்கத்துக்கு கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் கூறப்பட்ட அனுமானமே தவிர, இருதரப்பு உறவுகளையும் முன்னிறுத்தி பார்க்கப்பட்ட விடயமன்று.
அதேவேளை, அமெரிக்கா விலகினாலும், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஊடாக இலங்கைக்கான அழுத்தங்களை அமெரிக்கா கொடுத்துக் கொண்டிருக்கும் என்று கூறியிருக்கிறார் கலாநிதி தயான் ஜெயதிலக.
அந்த வழியைத் தான் தாமும் நாடப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்
ஐ.நாவுக்கான தூதுவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட தயான் ஜெயதிலகவுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளாமலேயே அதில் செய்த தலையீடுகள் நன்கு தெரியும். அந்த வகையில் தான் அவர் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஆனாலும், அமெரிக்கா, பேரவைக்கு வெளியே இருந்து இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்குமா என்பதை தீர்மானிக்கப் போவது கொழும்பு அரசியல் தான்.
கொழும்பில் ஆட்சியில் இருக்கப்போகும் தரப்பு எது என்பதைப் பொறுத்தே அமெரிக்காவின் அணுகுமுறைகள் தீர்மானிக்கப்படும்.
தனக்குச் சாதகமற்ற ஒரு அரசு கொழும்பில் உருவானால், அமெரிக்கா அதற்கு குடைச்சல் கொடுப்பதற்கு தயங்காது. அதற்கு கனடா, பிரித்தானியா என்று பல்வேறு நாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.
ஆனால் அதனை அழுத்தங்கள் என்று கூறமுடியாது, பல விடயங்கள் வலியுறுத்தப்படலாமே தவிர, தீவிரமான அழுத்தங்களாக அவை இருக்குமா என்பது சந்தேகம்.
ஏனென்றால், இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் இனிமேல் ஜெனீவாவில் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அவ்வாறான அரசியல் சூழலும் தற்போதைக்கு இல்லை. அமெரிக்கா போன்ற அதனை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நாடுகளும் ஜெனீவாவில் இல்லை.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ, கனடாவோ, பிரித்தானியாவோ, அமெரிக்காவின் பின்னால் செல்லத் தயாராக இருக்குமே தவிர, தாமாக தலைமை தாங்குவதற்கு தயங்கும்.
2019இல் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றாத ஒரு கட்டத்தில் கூட, அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் இன்னொரு கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் அளவுக்கு இந்த நாடுகள் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.
அமெரிக்காவின் வெளியேற்றம் தமிழர் தரப்புக்கு சாதகமற்றது என்றாலும், இப்போதைய நிலையில் அதனை மிகப்பெரிய பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது.
அதேவேளை அமெரிக்காவின் செல்வாக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இல்லாமல் போவதானது, இலங்கை போன்ற நாடுகளுக்கு பொறுப்புக்கூறல் கடப்பாடுகளின் மீதான அர்ப்பணிப்பைக் குறைத்து விடும்.
அந்தவகையில், அமெரிக்காவின் வெளியேற்றம் நிச்சயம் பாதகமான ஒன்று தான்.
-ஹரிகரன்-