உண்மையில் மற்ற ஆறுகளைப் போல சரஸ்வதி நதி தற்சமயம் எந்த இடத்திலும் பாயவில்லை. எனவேதான் இது தொடர்பாக மர்மமான பல கருத்துகள் நிலவி வருகின்றன.
ஆனால், இந்த நதியைப் பற்றி பல பழைமையான நூலான ரிக் வேதத்தில் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
மலையிலிருந்து இறங்கியதும் திடீரென மர்மமாய் மறையும் சரஸ்வதி நதி… உண்மை என்ன?
மலை உச்சியிலிருந்து ஓடி வரும் ஆற்றின் அருகே ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். அதை மற்றொருவர் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருக்க பாய்ந்து வரும் ஆறு திடீரென அவர்கள் நிற்கும் பகுதியைக் கடந்தவுடன் பூமிக்குள் மறைந்து விடுகிறது.
அந்தப் பகுதியைத் தாண்டி நீர் பாயவில்லை. இப்படி ஒரு வீடியோவை வாட்ஸ்அப் குரூப்களிலோ, யூ-டியூபிலோ சிலர் பார்த்திருக்கக் கூடும்.
இந்த வீடியோவைப் பார்த்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கும். பிரமிப்பு என்ற ஒரு காரணம் போதும்தானே மற்றவர்களுக்கும் ஷேர் செய்வதற்கு.
அப்படித்தான் இந்த வீடியோவும் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆனால், இதை ஷேர் செய்பவர்கள் கூடுதல் இணைப்பாக இதுதான் புராதன சரஸ்வதி நதி என்ற வார்த்தையையும் சேர்த்து விடுகிறார்கள்.
சரஸ்வதி நதி மறையும் இடம் இதுதான் என்று இணையத்தில் பல வீடியோக்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் சரஸ்வதி நதி இப்படித்தான் இருக்குமா? இப்படித் திடீரென பூமிக்குள் மறைந்து விடுமா ?
சரஸ்வதி நதி உண்மையாகவே இருக்கிறதா ?
உண்மையில் மற்ற ஆறுகளைப் போல சரஸ்வதி நதி தற்சமயம் எந்த இடத்திலும் பாயவில்லை. எனவேதான், இது தொடர்பாக மர்மமான பல கருத்துகள் நிலவி வருகின்றன.
ஆனால், இந்த நதியைப் பற்றி பல பழைமையான நூலான ரிக் வேதத்தில் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. யமுனை நதிக்கும் சட்லெஜுக்கும் இடையில் சரஸ்வதி நதி மிகப் பரந்த அளவில் பாய்ந்தது எனப் பழைமையான சில நூல்களில் தகவல்கள் இருக்கின்றன.
பின்னர் நதியின் திசை மாற்றத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ அது மறைந்து போயிருக்கக்கூடும் என்ற கருத்தையும் சிலர் முன் வைக்கிறார்கள்.
ஆனால், இந்து மத நம்பிக்கையின் படி இமயமலையில் தோன்றும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக இணைகின்றன. புகழ் பெற்ற கும்பமேளா நிகழ்வு நடக்கும் `திரிவேணி சங்கமம்’ என்ற பெயரின் அர்த்தம் மூன்று நதிகள் இணையும் இடம் என்பதுதான்.
ஆனால், இப்போது அந்த இடத்தில் வேறு வேறு பக்கங்களிலிருந்து பாய்ந்து வரும் கங்கை மற்றும் யமுனை நதிகள் மட்டும்தான் இணைவதைப் பார்க்க முடியும். அப்பொழுது மூன்றாவது நதி எங்கே என்ற கேள்வி எழக்கூடும்.
சரஸ்வதி நதி தோன்றும் இடத்திலிருந்து சிறிது தொலைவு நிலத்தில் மேல் பாய்வதாகவும் பின்னர் நிலத்தின் அடியில் மறைந்து பாய்ந்து மீண்டும் திரிவேணி சங்கமத்தில் இணைகிறது என்பதுமே காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையே குறிப்பிடப்பட்ட வீடியோவை சரஸ்வதி நதி என நம்பி அதை ஷேர் செய்யவும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
வீடியோவில் நதி மறைவது எதனால் ?
நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் பாய்ந்து மற்ற இரண்டு நதிகளுடன் கலக்கும் என்ற கருத்து அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
மாறாக இமயமலையில் உற்பத்தியான சரஸ்வதி நதி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் வழியாக பாகிஸ்தானில் நுழைந்து கடலில் கலந்ததாகச் சில ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நதியின் பழைய தடத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றன. வீடியோவில் பாய்ந்து ஓடி வரும் நீர் திடீரென மறைவதற்கு அந்த இடத்தின் நில அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம்.
கற்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நீரின் வேகத்தால் கற்களுக்கு அடியில் இருந்த மண் அடுக்குகள் அரிக்கப்பட்டிருக்கலாம். எனவே, நீரோட்டம் மறைவது போலத் தெரிந்தாலும் அது கற்களுக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கும்.
அது போல ஷேர் செய்யப்படும் வீடியோவில் காணப்படும் நபர்களும், அவர்கள் பேசும் மொழியும் அது இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்பதை உணர்த்துகின்றன.
இது மட்டுமல்ல இதைப் போல பல வீடியோக்கள் இணையத்தில் காணப்படுகின்றன. ஆனால், அது எதுவுமே சரஸ்வதி நதியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் சரஸ்வதி நதி என்பதே இப்போது இல்லை.