அமைச்சரவைக் கூட்டத்தில் பலத்த கருத்து மோதல்!

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோருக்கு இடையில் பலத்த கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தின் இடைநடுவில் கருத்து வௌியிட்ட அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அனர்த்த நிவாரண இழப்பீடு வழங்கும் விடயம் தனது அமைச்சுக்கு உரியது என்றும், ஆனால் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அதனை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கும் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் வஜிர, மோசடிகளைத் தவிர்க்கவே தான் அவ்வாறு செய்வதாகவும், பிரதேச செயலகங்கள் ஊடாக சிறந்த முறையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்போது அவருக்கும் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கும் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு இரண்டு பேரையும் அமைதிப்படுத்தியதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாகவே குறித்த இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அது தொடர்பில் இரண்டு அமைச்சர்களும் கலந்து பேசி தீர்மானமொன்றுக்கு வருமாறும் பணித்துள்ளார்.