காதலி பிரிந்த சோகத்தில் பாம்பைக் கொத்த விட்ட காதலன்… லைவ் வீடியோ சோகம்!

முன்னதாக கேமராவை விட்டு நகர்ந்து சென்ற அர்சன் தன்னுடைய வீட்டில் இருக்கிற `பிளாக் மாம்போ’ பாம்பை தன்னுடைய கைகளில் கடிக்கும்படி செய்திருக்கிறார். பாம்பு கடித்த இடத்தை கேமராவுக்கு முன்பாக காட்டியதும் பார்வையாளர்கள் அதிர்ந்து போகிறார்கள்.

காதலி பிரிந்த சோகத்தில் பாம்பைக் கொத்த விட்ட காதலன்... லைவ் வீடியோ சோகம்!

உலகின் ஆகச் சிறந்த விஷயமே அன்பு காட்டுவதுதான். ஒரு கட்டத்தில் அந்த அன்பு  இல்லையென்றானதும் வாழ்க்கையே ஒரு காட்டு காட்டிவிட்டுப் போய் விடுகிறது. இருந்த அன்பு ஒன்று இல்லை என்றதும் அது தொலைந்த இடத்திலேயே நின்று கதற ஆரம்பித்து விடுகிறது. தனிமையா, விரக்தியா, தோல்வியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறபொழுது மனிதன் எடுக்கிற முடிவுகள் விசித்திரமானவை. ஆபத்தானவை.

அர்ஷன் வலீவ் (Arslan Valeev) மற்றும் அவரின் மனைவி கேத்ரினா (Ekaterina ‘Katya’) இருவரும் ரஸ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்தவர்கள். பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். 4 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களைக்கொண்ட சேனல் அவர்களுடையது. அர்ஷன் முன்னதாக ஒரு உயிரியல் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், விலங்குகள் குறித்த அனுபவம் அவருக்கு உண்டு. அதிகமாக பாம்புகள் குறித்த காணொளிகளைத் தயாரித்து வெளியிடுகிறார்கள். உலகின் கொடிய விஷம் கொண்ட பிளாக் மாம்பா என்கிற பாம்பை வைத்துப் பல காணொளிகளைத் தயாரித்திருக்கிறார்கள். அதில் சில பாம்புகளை அவர்களது வீட்டிலும் வைத்திருக்கிறார்கள். எல்லாமே நல்லபடியாக போய்க்  கொண்டிருந்த காலகட்டத்தில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பிரச்னை பெரிதாகும் ஒரு நாளில் அர்ஷன் கேத்ரினாவைப் பொது இடத்தில் வைத்து அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதிக்கிறது. “இனி மேலும் அர்ஷனுடன் வாழமுடியாது என்று அதே மாதத்தில் கணவனிடமிருந்து பிரிந்து செல்ல கேத்ரின் முடிவெடுக்கிறார். தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்குகிறார். அவருக்குப் பார்வையாளர்கள் அதிகரிக்கிறார்கள்.

அர்சன் கேத்தி தம்பதி லைவ் வீடியோ

இன்னொருபக்கம், இதுவரை தன்னோடு இருந்த மனைவி இல்லையென்றதும் விரக்தியின் உச்சிக்கே செல்கிற அர்சன் கேத்தியின் பிரிவை நினைத்து தினம் தினம் உருக ஆரம்பிக்கிறார். கேத்தி வேறு ஒருவருடன் வாழ ஆரம்பிக்கிறார். இது அர்ஷனை மேலும் காயப்படுத்துகிறது. விரக்தியில் இருந்த அர்ஷன் திடீரென செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தன்னுடைய யூடியூப் சேனலில் தன்னுடைய பார்வையாளர்களோடு நேரடி ஒளிபரப்பில் இணைகிறார். அவர் அமர்ந்திருக்கிற இடத்தின் பின்னணியில் சில பூனைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. நேரடி ஒளிபரப்பில் இணைகிற அர்ஷனின் முகம் மிகுந்த சோர்வாக காணப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வணக்கம் சொல்கிற அர்ஷன் தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறார்.

“ஹாய் கைஸ்… ஒரு முக்கியமான வேலை செய்ய வேண்டிய நேரம் இப்போ வந்துருச்சு….” எழுந்து செல்கிறார். அவர் எழுந்து சென்ற சில வினாடிகளில் வினோத சத்தம் ஒன்று கேட்கிறது. இருபது வினாடிகள் கழித்து மீண்டும் வந்து கேமராவுக்கு முன்பாக அமர்கிறார். சிறிது நேரம் அமைதியாக இருக்கிற அர்ஷன் “கொஞ்ச நேரம் உன்னோடு நான் இருக்க வேண்டும்” என்கிற குறுந்தகவலை கேத்திக்கு அனுப்புவதற்காக தன்னுடைய மொபைலில் இருப்பதாகக் கூறுகிறார். “நான் கேத்தியை அதிகமாக விரும்புகிறேன், இந்தத் தகவலை அவளிடம் தெரியப்படுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய கையை கேமராவுக்கு நேராகக் காட்டுகிறார். அவருடைய விரல்களில் ரத்தம்வழிய ஆரம்பிக்கிறது. “நான் போய் வருகிறேன், இப்படி எனக்கு நடக்குமென்று நான் எப்போதும் நம்பவில்லை என்று கூறுகிறார். முன்னதாக கேமராவை விட்டு நகர்ந்து சென்ற அர்ஷன்  தன்னுடைய வீட்டில் இருக்கிற `பிளாக் மாம்போ’ பாம்பை தன்னுடைய கைகளில் கடிக்கும்படி செய்திருக்கிறார். பாம்பு கடித்த இடத்தை கேமராவுக்கு முன்பாக காட்டியதும் பார்வையாளர்கள் அதிர்ந்து போகிறார்கள். தொடர்ந்து பேசுகிற அர்ஷன் கேத்தியின் அலைபேசி எண்ணைப் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கிறார். “யாராவது கேத்தியிடம் தெரியப்படுத்துங்கள் அவள் இப்போதாவது என்னை வந்து பார்க்கட்டும்” எனக் கூறுகிறார். நேரடி ஒளிபரப்பில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற அர்ஷன் சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார்.

பிளாக் மாம்போ கடித்ததை லைவ் வீடியோவில் காட்டுகிறார்

சம்பவம் நடந்த (சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம்) காலகட்டத்தில் கேத்தி யாரிடமும் இதுகுறித்துப் பேச மறுக்கிறார். பின்னொரு நாளில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் “எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை, நாங்கள் பிரிந்திருந்தோம், இப்போது வரை அந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை, தகவல் கிடைத்து உடனடியாக அர்ஷன் வீட்டுக்குச் சென்றேன், அதற்குள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தார்கள். என்னால் அர்ஷனின் செயலை நம்பமுடியவில்லை “ எனக் கூறியிருக்கிறார்.

அர்ஷன் பூனைகளோடும் பாம்புகளோடும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதால் அவரின் ஆசையின்படி தற்போது அர்ஷன் விட்டுச் சென்ற யூடியூப் சேனலை கேத்ரின் நடத்திக்கொண்டிருக்கிறார்.

வீட்டில் வைத்துப் பராமரிக்கும் அளவுக்கு `பிளாக் மாம்போ’ பாம்புகள் சாதாரண பாம்பு கிடையாது. அவை உலகத்திலுள்ள அபாயகரமான பாம்புகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.