ஒரே கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட கோயில்கள்… சிற்பக் களஞ்சியமாக விரிந்து கிடக்கும் அய்ஹோல்

சிற்பங்கள், குடைவரைக் கோயில்கள், கற்றழிகள்… சாளுக்கியர்களின் சிற்பப் பயிற்சிப் பட்டறையான அய்ஹோல் கிராமம்! #Aihole

ஒரே கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட கோயில்கள்... சிற்பக் களஞ்சியமாக விரிந்து கிடக்கும் அய்ஹோல்

ந்தியாவில் கோயில் இல்லாத கிராமமே இல்லை.  ஆனால், ஒரு கிராமமே கோயில்களாலும், சிற்பங்களாலும் நிறைந்திருக்கும் அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்கு திரும்பினாலும் உளியடி விழுந்த பாறைகள் சிற்பங்களாகவும், கோயில்களாகவும் சுமார் 1500 ஆண்டு கால வரலாற்றைத் தாங்கி நிற்கின்றன. ஊரில் இருக்கும் வீடுகளைவிடவும், சிற்பக் கோயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமோ என்று நாம் வியந்துநிற்கும்படி காணப்படுகிறது அய்ஹோல் (Aihole). கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், மலப்பிரபா நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது அந்தக் கிராமம்.

அய்ஹோல் கிராமத்தின் தொன்மப் பெயர், ‘ஆரியபுரம்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியபுரம் என்று பெயர் வந்ததற்கு சுவையான ஒரு புராணக் கதையை இங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள். பரசுராமர் க்ஷத்திரிய அரசர்கள் மற்றும் அவர்களது சேனைகளை அழித்த பிறகு, குருதி படிந்த கோடரியை  (பரசு ) மலப்பிரபா நதியில்தான் கழுவினாராம். அப்போது, இந்த இடம் முழுவதுமே  சிவந்துபோனதாகக் கூறுகிறார்கள்.

மலப்பிரபா நதியின் வடகரை, மணற்பாறைகளும் விளைநிலங்களும் நிறைந்த பூமி. இன்று பசுமையாகவும் செழிப்பாகவும் காணப்படுகிறது. இங்கு காணக்கிடைக்கும் செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதிகள், சாளுக்கியர் கால வரலாற்றைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.  அய்ஹோல் கிராமத்தைச் சுற்றிலும் காணப்படும் மணற்பாறைகள்  (Sand Stones), வெட்டுவதற்கும் செதுக்குவதற்கும் எளிதானவை. மாமல்லபுர கிரானைட் பாறைகளைப் போன்று கடினமான தன்மை அந்த மணற்பாறைகளுக்கு இல்லை. எனவே, சாளுக்கியர்கள் தங்களது சோதனை முயற்சியை இங்குதான் மேற்கொண்டனர். சாளுக்கியர்களின் சிற்பப் பயிற்சிப் பட்டறைதான் இந்த  அய்ஹோல் கிராமம் என்று கூறலாம். 5 -ம் நூற்றாண்டு முதல்  12-ம் நூற்றாண்டுக் கால அளவிலான பல்வேறு சிற்பங்கள், குடைவரைக் கோயில்கள், கற்கோயில்கள் எனக் கிட்டத்தட்ட  120 – க்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன. இந்துக் கோயில்களே அதிகம் உள்ளன. இவை சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரை வழிபடுவதற்காக எழுப்பப்பட்டவை. சில சமணக் கோயில்கள், மகாவீரர் மற்றும் நேமிநாதருக்கு எழுப்பப்பட்டவை . ஒரேயொரு பௌத்த விகாரை அமைந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் சிற்பங்கள், கற்கோயில்கள், குடைவரைக் கோயில்கள் எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பதற்கு அடித்தளம், சாளுக்கியர்களால் அய்ஹோல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிதான் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனால்தான்  அய்ஹோல் கிராமம்,  ‘இந்தியப் பாறை கட்டடக்கலையின் தொட்டில்’ என்று அழைக்கப்படுகிறது.

கண்களில் தென்படும் பாறை முழுவதும் சிற்பங்களாகக் காணப்பட்டாலும், அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபவை …

* துர்கை கோயில்

* லாட்கான் கோயில்

* ராவண பாடி கோயில்

* ஜோதிர்லிங்கக் கோயில்

* மெகுட்டி கோயில்

துர்கை கோயில் 

துர்கை கோயில் என்று அழைக்கப்பட்டாலும், இது பௌத்த விகாரையின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. சைவம், வைஷ்ணவம், சக்தி வழிபாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரின் சிற்பங்கள்  காணப்படுகின்றன. இந்தக் கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா,  ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா என்பதில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இது, அஜந்தாவில் காணப்படும் குகையின் அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது.

துர்கை கோயில் என்று அழைக்கக் காரணம், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கியபடி போர்க் கோலத்தில் நின்றுகொண்டிருக்கிறாள் துர்கை. துர்கைக்கு  வலப்புறத்தில் சிம்மம் ஆவேசத்துடன் நின்றுகொண்டிருக்க, இடப்புறத்தில் நின்றுகொண்டிருக்கும் பசு, சிம்மத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேவியைத் தன் நாவினால் தடவிக்கொடுத்தபடி இருக்கிறது. வேறெங்கும் காணக்கிடைக்காத அதி அற்புதமான காட்சி இது. போர்க்கோலத்தில் நின்றுகொண்டிருந்தாலும் துர்கையின் முகம் அமைதியாகக் காட்சியளிக்கிறது. பசுவின் தீண்டுதல் துர்க்கையின் அமைதிக்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தக் கோலத்தில் காட்சிதரும் துர்கையைக் காண்பதற்காகவேனும் அய்ஹோலுக்கு ஒருமுறை சென்று வர வேண்டும். இது மட்டுமல்லாமல், நந்திமீது சாய்ந்துகொண்டிருக்கும் ரிஷபாந்தக மூர்த்தி, பூமிதேவியை மீட்டு வந்த வராக மூர்த்தியின் சிற்பம் ஆகியவை ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அழகாகக் காட்சியளிக்கின்றன.

லாட் கான் கோயில்

துர்கை கோயிலுக்கு அருகே, விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட கோயிலாக இது கருதப்பட்டாலும், தற்போது கோயிலுக்குள் சிவபெருமான் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அய்ஹோலில் காணப்படும்  கோயில்களில் பழைமையானதாகக் கருதப்படும் இது,சோதனை முயற்சியில் எழுப்பப்பட்ட கோயில் என்றே கருதப்படுகிறது . கருவறையில் கருடன், நந்தியின் உருவங்கள் காணப்படுகின்றன. பழைமையான சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது. கருவறைக்கு முன் முகப்பு மண்டபம், கூரைகளில் காணப்படும் பூ வடிவ வேலைப்பாடுகள்,  தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.

ராவண பாடி கோயில் 

துர்கை கோயிலுக்கு வடகிழக்கே மலைமீது அமைந்திருக்கிறது, ராவணபாடி கோயில் . அய்ஹோலில் காணப்படும் குடைவரைக் கோயில்களில் மிகவும் பழைமையானது இது. அடிப்படையில் இதுவொரு சைவக் குடைவரை. ராவண பாடி என்று எதற்காகப் பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.  கருவறையில் சிவலிங்கம் அமைந்திருக்கக் குடைவரை மண்டபத்தின் சுவர் முழுவதும் அர்த்தநாரி, விஷ்ணுவின் வராக அவதாரம், நடராஜர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகரும் பார்வதி தேவியும் அருகில் இருக்க, நடனமாடிக்கொண்டிருக்கும் ஆடல் வல்லான் நடராஜரின் சிற்பம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.

 

ராவணபாடிக்கு அருகில் நந்தியுடன் உயரமான லிங்கம் ஒன்று காணப்படுகிறது . இதுதான் கல்லினால் செதுக்கப்பட்ட முதல் லிங்கக் கோயிலாகக் கருதப்படுகிறது. இதுவும் சோதனை முயற்சி என்றே கூறுகிறார்கள் .

ஜோதிர்லிங்கக் கோயில் 

பழைமையான கட்டுமான அமைப்பைக்கொண்ட கோயில் இது. தற்போது, இந்தக் கோயிலின் பெரும்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது . ராவண பாடி கோயிலுக்குத் தெற்கே அமைந்திருக்கும் இந்தக் கோயில்,கல்யாண்புரி சாளுக்கியர்களால் எழுப்பப்பட்டவை. சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்ட இந்தத் திருக்கோயில் சுவர்களில் கார்த்திகேயன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

மெகுட்டி ஜைனக் கோயில் 

ஒரு குன்றின்மீது இரண்டு அடுக்காக மெகுட்டி ஜைனக் கோயில் அமைந்திருக்கின்றது.  ஜைனத்தின்  24 – வது தீர்த்தங்கரரான மகாவீரருக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. இதில் காணப்படும் கல்வெட்டு, இந்தக் கோயில் இரண்டாம் புலிகேசியின் அரசவையில் இருந்த புலவர் ரவிகீர்த்தி என்பவரால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது . மேலும், வரலாற்று முக்கியத்துவம் பெறும் வகையில் புலிகேசி ஹர்ஷவர்த்தனரை வென்ற செய்தியும், பல்லவர்களுடனான மோதல் பற்றிய செய்தியும்  காணப்படுவது குறிப்பிடத்தக்கது.  இந்தக் கோயிலின் மண்டபச் சுவர்களில் மகாவீரர் , பாசுபதநாதர் ஆகியோரின் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

இந்தியாவில் சிற்பக் கலைக்கும், கற்கோயில் கட்டுமானத்துக்கும் சாளுக்கியர்கள் அளித்த பங்களிப்பு அளவில்லாதது. அதிலும் சாளுக்கியர்கள் அரசாண்டபோது, பல்லவர்களுடன் ஓயாமல் போர் புரிந்துகொண்டிருந்த சூழலிலும்கூட அவர்கள் சிற்பக் கலைக்கு அளித்த முக்கியத்துவம் மலைக்கவைக்கிறது. பதாமி, பட்டடக்கல், கூடல் சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் இதே பாகல்கோட்டையில்தான் இருக்கின்றன.

அய்ஹோல் கிராமத்தில் சாளுக்கியர்களால் ஏற்படுத்தப்பட்ட சிற்பக் கோயில்களை, அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் காணவேண்டிய கலைப் பொக்கிஷம் என்றால் மிகையல்ல.