வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய முதியோர் இல்லம்: அதிகாரிகள் ஆய்வு

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் மனித கழிவுகளை வெறும் கையால் சுத்தம் செய்ய முதியவர் ஒருவர் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அங்கு சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் அன்னதானப்பட்டியில் மாநகராட்சி உதவியோடு கலைவாணி என்பவரால் முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. 35 பேர் பராமரிக்கப்பட்டு வரும் இந்த இல்லத்தில், மனிதக் கழிவுகளை முதியவர் ஒருவர் வெறும் கைகளால் சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகியது. அதேபோல், மூதாட்டி ஒருவர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதில் இறக்கி விடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

 

இது குறித்து விளக்கம் அளித்த கலைவாணி, மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், தாங்கள் யாரையும் இவ்வாறு செய்ய நிர்பந்திக்கவில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட முதியோர் இல்லத்தில் சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரபாகரன் ஆய்வு செய்தார். அங்கிருக்கும் முதியோரிடம் விசாரணையும் நடத்தினார்.

மேலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படுகிறதா எனவும் விசாரித்தார். இதனை அடுத்து நமது செய்தியாளருக்கு பதிலளித்த பிரபாகரன் , தாங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதாக அங்கிருக்கும் முதியோர் தெரிவித்ததாக கூறினார். ஆயினும் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.