யாழில். விசித்திரமிக்க சிவாலயம்!

உலகிலேயே முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று யாழ்ப்பாணம் நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையிலேயே சிவ தட்சிணாமூர்த்திக்குரிய திருக்கோவில் ஒன்றும் இதனுடன் நிறுவப்பட்டு நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் நிறுவப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று காலை நடைபெற்றது.

கும்பாபிஷேகக் கிரியைகளை சித்தங்கேணி வீணாகான குருபீடத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். மகா கும்பாபிஷேகப் பெருவிழா நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்றது.

இலங்கையிலேயே முதன் முறையாக சிவதட்சணா மூர்த்திக்கெனத் தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் இதுவாகும். சிவதட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.