யாழ்., சுழிபுரம் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் சடலம் நேற்று (26) செவ்வாய்க்கிழமை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதனையடுத்து அது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியால், நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு. வாய் மூலமான பாலியல் துன்புறுத்தல்களுக்கான தடயங்கள் காணப்படுவதாகவும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது்
சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுளிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிசார் நேற்று (26) கைது செய்திருந்தனர்.
குறித்த சந்தேகநபர் இன்று (27) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவருக்கு எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ரெஜினாவின் இறுதி அஞ்சலியில் பெருந்திரளானோர் பங்கேற்பு
சுழிபுரம் – காட்டுப்புலம் மாணவியின் கொலைக்கு பின்னர் இறுதி நிகழ்வில் கூட மத்திய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதும் இதுவரை அங்கு சென்று ஆறுதல் தெரிவிக்கவோ பார்வையிடவோ செல்லவில்லை ஊர்மக்கள் குற்றச்சாட்டினர்.
இறந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சடலம் சுழிபுரம் – திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது.
இறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள் காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வெண்கரம் ஆசிரியர்கள் செயற்பாட்டாளர்கள் காட்டுப்புலம் – பாண்டவெட்டை சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.