உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய தலைகீழ் முடிவை ஏற்படுத்தி 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட தென் கொரியா நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியை முதல் சுற்றுடன் வெளியேற்றியது.
உலகக் கிண்ண வரலாற்றில் ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் ஜேர்மனியை தென் கொாரியா வெற்றிகொண்டதும் இதுவே முதல் தடவையாகும்.
ஜெர்மனி வீர்ர்களின் தவறுகளினாலேயே தென் கொரியாவின் இரண்டு கோல்களும் உபாதையீடு நேரத்தில் 3 நிமிட இடைவெளியில் போடப்பட்டன.
கஸான் எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற எவ் குழுவுக்கான போட்டியின் 93 ஆவது நிமிடத்தில் தென் கொரிய அணித் தலைவர் ஹியுங்மின் சன் உதைத்த கோணர் கிக்கை ஜேர்மன் பின்கள வீரர்கள் திசை திருப்ப தவறிய அதேவேளை 6 யார் கட்டத்துக்குள் இருந்தவாறு யங்வொன் ரிம் கோலாக்கினார்.
இந்த கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து பெறப்பட்டதாக உதவி மத்தியஸ்தர் கொடியை உயர்த்தி சமிக்ஞை செய்தார். ஆனால் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பை நாடிய ஐக்கிய அமெரிக்க மத்தியஸ்தர் மார்க் ஜீஜர் அந்த கோலை அங்கீகரித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜேர்மனி அணித் தலைவரும் கோல்காப்பளருமான மெனுவல் நோயரும் மத்தியவரிசையில் இணைந்து கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முற்பட்டார்.
ஆனால் தென் கொரிய எல்லையிலிருந்து உயர்வாக நீண்டதூரம் பரிமாறப்பட்ட பந்தை நோக்கி மூச்சு முட்ட ஓடிய தென் கொரிய அணித் தலைவர் ஹியுங்மின் சன் 96 ஆவது நிமிடத்தில் வெறுமனே இருந்த ஜேர்மன் கோலினுள் பந்தை இடதுகாலால் புகுத்தி தென் கொரியாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த வெற்றியை உறுதிசெய்தார்.
சுவிடனிடம் மெக்சிகோ 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி அடைந்ததை அடுத்து இப் போட்டியில் ஒரு கோலினால் வெற்றிபெற்றாலும் இரண்டாம் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதை நன்கு அறிந்திருந்த ஜேர்மனி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்த்தாக்குதலை நடத்திய அணியாகத் தென்படவில்லை.
ஜேர்மனியின் பந்து பரிமாற்றங்கள் ஆமை வேகத்தில் இடம்பெற்றதுடன் பல சந்தர்ப்பங்களில் பின்னோக்கிய நகர்வுகளே இடம்பெற்றன. மேலும் அவ்வணி வீரர்கள் கோல் போட எடுத்த பல முயற்சிகளை தென் கொரிய கோல்காப்பாளர் ஜோ ஹியொன்வூ அசாத்திய திறமையுடன் செயற்பட்டு தடுத்து நிறுத்தி பலத்த பாராட்டைப் பெற்றார்.
ஜெர்மனியின் தோல்வியானது தென் கொரியர்களுக்கு பேரானந்தத்தைக் கொடுத்த அதேவேளை, ஜெர்மனிக்கு தாங்கொணாத் துயரைக் கொடுத்தது.
(என்.வீ.ஏ.)