பைக்கிற்கு கோவில் கட்டி வழிபடும் கிராமம் பற்றி தெரியுமா?

நமது நாடு முழுவதும் பல மாநிலங்களிலும், பல வகையான கடவுள்களுக்கு கோவில்கள் இருக்கின்றன. கடவுள்கள் மட்டுமல்லாமல் ஞானிகள்,மகான்கள், பிற உயிர்களுக்கும் இறைவனுக்கு நிகரான மதிப்பளிக்கப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் அவனது அன்றாட தேவைகளுக்கு உபயோகப்படும் பொருட்களுக்கும் நம் நாட்டின் சில இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு கோவிலைப்பற்றி இங்கு நாம் காண்போம்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே இருக்கும் பாலி மாவட்டத்தில் ஓம் பண்ணா என்ற தெய்வ பக்தி கொண்ட ஒரு வாலிபர் வாழ்ந்து வந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு பாலி – ஜோத்பூர் நெடுஞ்சாலையில் தனது புல்லட் இருச்சக்கர வாகனத்தில் ஓம் பண்ணா பயணித்த போது, தனது வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்திலிருந்த ஒரு மரத்தில் தனது இருசக்கர வாகனம் மோதி அந்த நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துர்நிகழ்வை வழக்கு பதிவு செய்த அப்பகுதி காவல் துறையினர், ஓம் பண்ணா பயணித்த அந்த புல்லட் வாகனத்தை மீட்டு தங்களின் காவல் நிலையத்தில் நிறுத்திவைத்திருந்தனர். மறுநாள் காலையில் பார்த்த போது அந்த காவல் நிலையத்தில் அந்த புல்லட் வாகனம் இல்லை. யாராவது அந்த வண்டியை திருடிவிட்டார்களா என்று எல்லா இடங்களிலும் தேடிய அந்த காவலர்கள் இறுதியாக அந்த புல்லட்டை ஓம் பண்ணா விபத்தில் இறந்த அந்த இடத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தாலும் மீண்டும் அந்த புல்லட் வாகனத்தை தங்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இம்முறை அந்த வண்டியில் இருந்த எரிபொருளை முழுமையாக எடுத்து விட்டு, அந்த வண்டியின் சக்கரங்களுக்கும் சங்கிலி கொண்டு பூட்டு போட்டு விட்டு தங்கள் இரவு நேர பணிக்கு சென்று விட்டனர்.

மீண்டும் மறுநாள் காலை அந்த காவலர்கள் வந்து பார்த்த போது அந்த வண்டி அங்கே இல்லை. இப்போது நேரே அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று அந்த காவலர்கள் பார்த்த போது அங்கே அந்த வாகனம் இருந்தது. இதுபோல் ஐந்து ஆறு முறைகளுக்கு மேல் நடந்த பிறகு இது தங்கள் மனித சக்திக்கு மீறிய ஒரு ஆற்றலின் செயல் என்றுணர்ந்த அந்த காவலர்கள், இறுதியாக அந்த வண்டியை அந்த விபத்து நடந்த இடத்திலேயே விட்டுவிட்டனர். பிறகு இச்சம்பவத்தை கேள்விப்பட்ட அக்கிராமத்தினரும், அந்த வாலிபரின் உறவினர்களும் அவரின் புல்லட் வாகனத்திற்கு சிறிதாக ஒரு கோவில் எழுப்பி வழிபட ஆரம்பித்தனர்.

அன்றிலிருந்து இந்த சாலையின் வழியே பயணிக்கும் அனைவரும் இந்த புல்லட் கோவிலுக்கு வந்து ஓம் பண்ணாவை வழிபட்டு செல்வதால் தங்கள் பயணம் நன்றாக இருப்பதாகவும், அப்படி இங்கு வழிபடாமல் பயணித்தவர்கள் தங்கள் பயணங்களில் சிறு சிறு தடங்கல்களையும், விபத்துக்களையும் சந்தித்ததாக கூறுகிறார்கள் இப்பகுதியினர்.

அதுபோல் இந்த சாலையில் வாகனத்தில் பயணிப்பவர்கள் எவருமே, இக்கோவில் பகுதியை கடக்கும் வரை ஓம் பண்ணா விற்கு மதிப்பளிக்கும் விதமாக வேகம் குறைவாகவும், ஹாரன் ஒலி எழுப்பாமலும் கடந்து செல்கின்றனர். இக்கோவில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகருக்கு அருகிலுள்ள பாலி மாவட்டத்தில் இருக்கிறது.