ஹோம் மேட் சோப் தயாரிக்கக் கற்றுக்கொண்டு, தற்போது மாதம் முப்பதாயிரம் லாபம்

நமக்கு சிம்பிளாத் தோணுற விஷயம் பல பேருக்கு உபயோகமா இருக்கும். அந்த மாதிரிதான் எனக்கு ஹோம் மேட் சோப். அதைப் பத்தி கேள்விப்பட்டப்ப சாதாரணமாத் தோணுச்சு. இப்ப அதுதான் என் வருமானம்” என்று சிரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிசினஸ் விமன் ஐஸ்வர்யா. செய்வது ஹோம் மேட் சோப், கிடைப்பதோ மாதம் முப்பதாயிரம் ரூபாய்.
“எனக்குச் சொந்த ஊர் சென்னை. பி.காம் படிச்சுட்டு ஒரு பேங்க்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் இல்லத்தரசியா வீட்டைக் கவனிக்க ஆரம்பிச்சேன். பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் எல்லா அம்மாக்களும் மாதிரி அவளோட ஒவ்வொரு விஷயத்துக்கும் அவ்வளவு மெனக்கிட்டேன். டவல்ல ஆரம்பிச்சு, அவ சாப்பிடுற சாப்பாடு வரை தேடி தேடி ஆரோக்கியமாத் தேர்ந்தெடுத்தேன். அப்பதான் ஏன் கெமிக்கல் கலந்த சோப்பை நம்ம குழந்தைக்கு யூஸ் பண்ணனும், வேற வழியே இல்லியானு மார்கெட் மார்கெட்டா தேடி அலைஞ்சேன்.
இயற்கைனு சொல்லியிருந்த பல சோப்புகள்ல கெமிக்கல் கலந்திருக்கிறதை சின்ன சின்ன எழுத்துகள்ல அவங்களே போட்டிருந்தாங்க. கெமிக்கல் ஃப்ரீனு போட்டிருந்ததுலகூட பல கெமிக்கல்ஸ். நொந்துபோய் விரக்தியாகி வீட்டுக்கு வந்துட்டேன். அப்பத்தான் ஏன் நாமளே வீட்ல சோப்பை இயற்கையாத் தயாரிக்கக் கூடாதுனு தோணுச்சு. உடனே கூகுள்ல தேடினேன். அதுலேயே ஹோம் மேட் சோப் செய்றது பத்தி ஏராளமான வீடியோஸ் இருந்தது. ஒவ்வொண்ணையும் கவனமாப் பார்த்தேன்.
அதுக்கு அப்புறம் நானே வீட்ல தேங்காய், செம்பருத்தி, கேரட், எலுமிச்சை, ஆலோவேரா, ஆரஞ்சு, பால், தயிர், பழம், காய் வகைகளைப் பயன்படுத்தி ஹோம் மேட் சோப்புகளை செய்யப் போறேன்னு சொன்னதும் எல்லாரும் சிரிச்சுட்டாங்க. சோப் செய்றதுக்குதானே கம்பெனி எல்லாம் இருக்கு. அதெல்லாம் மெஷின்ல ரெடி பண்றது. நம்மளால எல்லாம் வீட்ல செய்ய முடியாதுன்னு சொன்னாங்க. ஆனா நான் விடலையே. ஒருதடவை, ரெண்டு தடவைன்னு சரியா சோப் வர்ற வரைக்கும் செய்ஞ்சு பார்த்துட்டே இருந்தேன். என்னோட முயற்சிக்கு வெற்றி கிடைச்சது. நான் செஞ்ச சோப்பை என் சொந்தக்காரங்க எல்லாருக்கும் கொடுத்தேன். யூஸ் பண்ணிட்டு செம பாசிட்டிவ் கமென்ட்ஸ். எனக்கு பயங்கர சந்தோஷம். கொஞ்ச நாள்லேயே சோப்பு வாங்கினவங்க எல்லாம் திரும்ப சோப் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பத்தான் என் கணவர் `நீ ஏன் இதை பிசினஸா மாத்தக் கூடாதுன்னு கேட்டார்’ எனக்கும் உள்ளுக்குள்ள அந்த ஆசை இருந்தது.
உடனே களத்தில் இறங்கிட்டேன். என்கிட்ட இருந்த தொகையை முதலீடா வெச்சு `நேச்சர் டெஸ்டினி’ங்கிற நிறுவனத்தை ஆரம்பிச்சேன். ஆனா நான் நினைச்ச மாதிரி பிசினஸ் உடனே ஓஹோன்னு எல்லாம் போகலை. பிசினஸ் செய்றது எவ்வளவு கஷ்டம்னு அப்போ புரிஞ்சுக்கிட்டேன். இயற்கை சோப்ங்கிற கான்செப்டை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கவே அவ்வளவு சிரமப்பட்டேன். அதனால ஆன்லைன் மக்கள் மூலமா முதல்ல என் புராடக்டை சேல் பண்ண ஆரம்பிச்சேன். நான் நினைச்ச மாதிரி என் பிசினஸ் ஆறுமாசத்துக்கு அப்புறம்தான் மெள்ள மெள்ள தலையெடுக்க ஆர்மபிச்சது. சோப்புக்கான பேஸ் பொருள்களை எல்லாம் சம்பந்தப்பட்டவங்ககிட்டேயிருந்து ஹோல் சேல் முறையில வாங்கிடுறதுனால சோப்பின் அடக்க விலையைக் குறைச்சு லாபத்தை அதிகரிக்க முடிஞ்சது.
என் கம்பெனி ஆரம்பிச்சு இன்னிக்கு மூணு வருஷம் ஆகிடுச்சு. இப்ப சோப்போட ஷாம்பூ, பாடி வாஷ் போன்றவற்றையும் தயாரிக்கிறேன். வாடிக்கையாளரோட ஸ்கின்னுக்கு ஏற்ப தனித்துவமான சோப் தயாரிச்சுக் கொடுக்கிறதுதான் என் ஸ்பெஷல். இப்ப ஆர்டர்ஸ் அதிகரிச்சிருக்கு. ஆரம்பத்துல நூறு ரூபாய்கள்ல கிடைச்ச வருமானம் இப்ப மாசம் முப்பதாயிரம் ரூபாயா அதிகரிச்சிருக்கு. என் குழந்தைக்குன்னு ஆரம்பிச்சது இன்னைக்கு இல்லத்தரசியா இவ்வளவு சம்பாதிக்கிறேன்னா ஆச்சர்யமா இருக்கு” என்று பெருமை பொங்க முடிக்கிறார் ஐஸ்வர்யா.