பிக்பாஸ் சீசன் 2 : பத்தாம் நாள்!!- ( வீடியோ)

நேற்றைய தினத்தைப் போலவே, இன்றும் பிக் பாஸ் வீட்டின் பரபரப்பிற்கான காட்சிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மும்தாஜ்தான் மையமாக இருந்தார்.

தன்னுடைய ‘ஒத்துழையாமை இயக்கத்திற்காக’ அவர் சொல்லும் சில காரணங்களில் உள்ள லாஜிக் சரியாகவே இருக்கிறது.

‘தண்டனை என்ற பெயரில் தரப்படும் வேலையைச் செய்ய மாட்டேன்’ என்று தன் தரப்பில் உறுதியாக அவர் நிற்பது சரியானது.

கடந்த சீஸனிலாவது, பல நாட்களுக்குப் பிறகே ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்வது’ போன்ற சர்ச்சைக்குரிய சவால்கள் வந்தன.

ஆனால் இரண்டாவது சீஸனி்ல் ஒன்பதாவது நாளில் இருந்தே தன் ‘திருவிளையாடல்களை’ பிக்பாஸ் துவங்கிவிட்டார்.

பெண் பணியாளர்களை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள், இன்னமும் ஒருபடி முன்னேறத் துவங்கிவிட்டன.

ஆண்கள் மெத்தைகளில் அமர்ந்து ரசிக்க, கலைநிகழ்ச்சி என்கிற பெயரில் பெண் போட்டியாளர்களை ஆட வைத்தது அப்பட்டமான பிற்போக்குத்தனம்.

அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த மமதையில் பெண்களை போகப்பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஜமீந்தாரர் காலத்தின் அநீதிகளை மறுபடியும் மீட்டெடுக்கும் சித்தரிப்புகளை ‘பிக் பாஸ்’ செய்வது கண்டிக்கத்தக்கது.

துளித்துளியாக நகரும் பெண்களின் முன்னேற்றத்தை பல அடிகள் பின்னுக்கு இழுக்கும் இதுபோன்ற பிற்போக்கு சவால்களை ‘பிக் பாஸ்’ பின்பற்றக்கூடாது.

இதன் மூலம் பெண் பார்வையாளர்களின் ஆதரவை இழந்தால் இந்த நிகழ்ச்சியின் வெற்றி சதவீதம் கணிசமாக பாதிக்கப்படக்கூடும்.

சென்ற சீசனில் கமல், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிகழ்ச்சிக்கு , தார்மீகமாக மன்னிப்பும் கேட்டு, இனிமேல் இது போல் நிகழக்கூடாது என பிக்பாஸுக்கு கோரிக்கையும் வைத்தார். ஆனால், இந்த முறை பெண்களை காட்சிப்படுத்தும் சில காட்சிகள் voyeuristic வகையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இடுப்பு விஷயத்தை வைத்து மஹத் பேசியது ஒரு துளி. வேலையாள் , உதவியாளர் என்பதைக் கடந்து, வைஷ்ணவி இன்றைய நிகழ்ச்சியில் சொன்னது போல் இது அடிமை நிலை. ப்ரைம் டைம் நிகழ்ச்சியில், வீட்டில் அனைவரும் பார்க்கும் நிலையில் இருக்கும் பிக்பாஸ் மாதிரியான நிகழ்ச்சியில், இது போன்ற சம்பவங்கள் வருவது அபத்தமானது கண்டிக்கத்தக்கது