40 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் குறித்தும் கலந்துரையாடல்; 10 ஆம் திகதி இந்திய தூதுவருடன் நேரில் சென்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம்
வடக்கு மாகாணசபை அபிவிருத்திகள் குறித்தும் மீள்குடியேற்றம், நில விடுவிப்புகள் குறித்தும் வடக்கின் அரசியல் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பிரதிநிதிகள் முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை நேற்று முன்தினம் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு மற்றும் வீட்டுத் திட்டம் என்பனவற்றை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கவும் பொதுமக்களின் காணிகளை வெகு விரையில் விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு -கிழக்கு மாகாண அபிவிருத்திகள் குறித்து நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வடக்கு பிரதிநிதிகளையே சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.
இதில் வடமாகாணத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரும் வலி வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன், பிரதேச சபை செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரும் வடமாகாணத்தின் சார்பில் கலந்துகொண்டனர்.
பிரதமர் தரப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், முப்படை பிரதானிகள், திறைசேரி செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது பலாலி விமான நிலைய புனரமைப்பு, மீள் குடியேற்ற நடவடிக்கைகள், காணி விடுவிப்பு, போரின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைவாய்ப்புகள், வடக்கு கிழக்கு பிரதேச சபைகளின் தர உயர்வுகளுக்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கேசரிக்கு தெரிவிக்கையில் ,
பலாலி விமான நிலையம் புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, இப்போது உள்ள நிலத்தை வைத்துக்கொண்டு அதில் பலாலி விமான நிலையத்தை புனரமைத்து பொதுப் பாவனைக்கு விடுவது குறித்தும், பிராந்திய விமான நிலையத்தை உருவாக்குவதில் மக்களின் காணிகளில் எந்த பாதிப்பும் வராத வகையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்தும், ஆராயப்பட்டது.
விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை மதிப்பீடு செய்வது குறித்தும் இதில் இலங்கை விமானப்படை, சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் இந்திய நிபுணர்களை வைத்துகொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஏற்கனவே இருக்கும் நிலங்கள் , ஓடுபாதைகள் மற்றும் அதனை ஒட்டிய நிலங்கள் என்பன இந்திய தொழிநுட்பவியலாளர்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு விமானநிலைய புனரமைப்புக்கு இது போதும் என்ற அறிக்கை இந்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக ஏற்கனவே இலங்கை இந்திய அரசுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆகவே அதற்கான உடன்படிக்கையை செய்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கிற்கு இது மிகவும் முக்கியமான தேவையாக உள்ள நிலையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அத்துடன் விமான நிலையத்துடன் தொடர்புபட்ட துறைமுகம் ஒன்றை கட்டுவது குறித்தும் இந்தியா தமது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ள நிலையில் இரண்டையும் புனரமைப்பது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன .
பலாலி விமான நிலையத்தின் விமானப்படையினருக்கு எவ்வளவு பகுதியை ஒதுக்குதல் ஏனைய பகுதியில் விமான நிலையத்தை புனரமைத்தல் புனரமைக்கும் விமான நிலையம் சிவில் கட்டுபாட்டின் கீழ் இயங்க வேண்டும் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் புனரமைக்கப்படும் விமான நிலையத்தில் விமானப்படைக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டாலும் கூட பிரதான விமான நிலையம் பொதுமக்கள் பாவனைக்காக அமைய வேண்டும் என்பதே தீர்மானமாகும்.
உள்ளக விமான நிலையமாக அமைக்கப்படுவதால் அதற்கான விமான ஓடுபாதை அளவுகள், விமானங்களின் தரங்கள் உள்ளிட்ட விடயங்களை இந்திய நிபுணர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தீர்மானங்களுக்கு அமைய ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 10ஆம் திகதி கைதடி பாலம் திறப்புவிழாவிற்கு பிரதமர் மற்றும் இந்திய உயரிஸ்தானிகர் ஆகியோர் வரவுள்ள நிலையில் இந்த விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுக்க தாம் அங்குள்ள அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் 40 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான நிர்மாணப்பணிகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் சில முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டது.
எனினும் சீனாவுக்கு வழங்கும் அத் திட்டத்தை நிறுத்தி அதே வேலைத்திட்டத்தை இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாதுகாப்பு படைகளிடம் உள்ள பொது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாமலும் உள்ள நிலையில் அவற்றை விரைவாக விடுவிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது. பொது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். பலாலி வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள பகுதி இன்றும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில் இதில் சுமார் 689 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் விடுவிக்கப்படாது உள்ளது.
இதில் சுமார் 1984 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். ஆகவே இந்த நிலப்பரப்பை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.
இந்த பகுதியில் இப்போது இரண்டு இராணுவ முகாம்கள் உள்ளன. ஆகவே இந்த இராணுவ முகாம்கள் இருக்கத்தக்க வகையிலேயே மக்களை குடியேற்ற முடியும் என்பதையும் மக்களுக்கு உரிய நிலங்களை வழங்குவதே முக்கியம் என்பது குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். எனினும் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்த பின்னர் நிலங்களை விடுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் கிளிநொச்சி பிரதான முகாமை அகற்றி அதில் உள்ள பொதுமக்களின் நிலங்களை வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினோம், இந்த விடயத்திலும் பிரதான முகாமை மாற்றுவதற்கும் அரசாங்கம் உரிய நிதி உதவிகளை வழங்கி வேறு ஒரு இடத்தை ஏற்பாடு செய்து தந்தவுடன் பொதுமக்களுக்கு நிலங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
வடக்கில் காங்கேசன்துறை தொழிற்சாலை தற்போது செயலிழந்துள்ள நிலையில் அந்த பகுதியில் தொழிற்சாலை, தொழில் பேட்டை அமைத்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கவும் ஏனைய இடங்களிலும் தொழில் பேட்டைகள் அமைப்பதற்கும் கிழக்கிலும் அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் பிரதேச சபைகளை பலப்படுத்துவதும் தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பது குறித்தும், அதேபோல் கிளிநொச்சியின் ஐந்து பிரதேச சபைகளின் தரமுன்னேற்ற நடவடிக்கைகள் முன்னெடுத்து செயற்படவும் தீர்மானிக்கப்பட்டது.
வன்னியிலும் அதேபோன்று நடவடிக்கைகளை முன்னெடுத்து மாநகர சபைகளாக மாற்றுவது குறித்தும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கும் நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபையின் தீர்மானம் ஒன்று குறித்தும் அதாவது கொழும்புத்துறையில் இருந்து நாவற்துறை வரையில் கடற்பரப்பை நிலமாக மாற்றி அதில் குடியேற்றங்களை முன்னெடுக்கவும், பொருளாதார மையங்களை வடக்கு கிழக்கில் அமைப்பது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டது எனக் குறிப்பிட்டனர். கடந்த கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கூட்டமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.