போலந்து நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர் கழுகு ஒன்றைப் புதை மண்ணிலிருந்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
போலந்து நாட்டின் SWINOUJSCIE என்னுமிடத்திலுள்ள புதைமணலில் கழுகு ஒன்று சிக்கிவிடுகிறது. புதைமணலில் சிக்கிய கழுகால் அதிலிருந்து மீண்டு வெளியேற முடியவில்லை.
இதைக் கவனித்த காட்டுயிர் புகைப்படக்காரர் ஒருவர் கழுகை மீட்க புதைமணலில் இறங்குகிறார். புதைமணல் எப்போதுமே ஆபத்தான ஓர் இடம். சில நொடிகளில் உள்ளே இழுத்துவிடும் அளவுக்கு ஆழம் கொண்டது.
விலங்குகள் மீட்புக் குழுவினர் புதை மணலின் மறுபக்கத்திலிருந்து புகைப்படக்காரருக்கு உதவி செய்கிறார்கள். கயிற்றின் உதவியுடன் கழுகு இருக்கிற இடத்துக்குச் செல்கிற புகைப்படக்காரர் கழுகை புதை மண்ணிலிருந்து மீட்டெடுக்கிறார்.
விலங்குகள் மீட்புக் குழுவினர் உதவியுடன் கழுகை மீட்டு கரைக்குக் கொண்டுவருகிறார்.
அதிக நேரமாகப் புதைமண்ணில் சிக்கி இருந்ததால் கழுகு நடக்க முடியாமல் இருப்பதைப் பார்க்கிற குழுவினர் மீட்கப்பட்ட கழுகுக்கு சிகிச்சையளிக்கிறார்கள். கழுகை குளிப்பாட்டி அதற்குச் சிகிச்சையளிக்கிறார்கள்.
கழுகு பிறந்து ஆறு மாதங்கள் இருக்கலாம் எனவும் பறப்பதற்கு முயன்றதில் தவறுதலாகப் புதை மணலில் சிக்கி இருக்கலாம் எனவும் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
கழுகுக்கு உணவு கொடுத்து அன்றைய இரவு முழுவதும் குழுவினர் பார்த்துக்கொண்டார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மனிதர்களுக்கு மனிதர்களே உதவாத காலகட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து கழுகை மீட்ட புகைப்படக்காரரை எல்லோரும் பாராட்டிவருகிறார்கள்.