சீரகம் = சீர்+அகம். தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்
இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாற்றுச் சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது
தமிழர்கள் இதை நீண்ட நெடுங்காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது
எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல் ஒன்று உண்டு.
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons, Terpene, Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் – anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
சீரகத்திற்கு ஆங்கிலத்தில் cumin என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.
நற்சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிலப்பு சீரகம், நட்சத்திர சீரகம், செஞ்சீரகம் என ஏழு வகை உண்டு. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
பொதுவாக சீரகம்
வெப்பமுண்டாக்கி- stimulant
பசிதூண்டி- stomachic
துவர்ப்பி- astringent
வாய்வு அகற்றி- carminative
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த மூலம் தீரும்.
சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம், மந்தம் நீங்கும்.
சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.
கருஞ்சீரகம்
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரகக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் தடிமனுக்கு நல்லது.
தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால்தலைவலிக்கு நல்லது.
கருஞ்சீரகத்தை வினிகரில்(vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.