அம்பத்தூர் ரயில்நிலையம் அருகே விரைவு ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 7.30 மணியளவில், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் செல்போன் பேசிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரகடம் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா மீது சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஹேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார். அவரது உடல் உருக்குலைந்து போனது. இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து, ஆவடி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஹேமலதா, காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி இறந்திருக்கிறார். பொதுமக்கள் சத்தம் போடுவதைக்கூட ஹேமலதா கவனிக்காமல் போனதால், உயிரிழந்தார். பெரும்பாலும், ரயில் நிலையத்தில் செல்போன் பேசிக்கொண்டு போவதால் உயிர்ப்பலி அதிகரித்துவருகிறது.