பாவ மன்னிப்புக் கேட்ட பெண்ணை சீரழித்த பாதிரியார்களை ஹோட்டல் பில் காட்டிக் கொடுத்தது.
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் மலங்கரை சிரியன் ஆர்தோடெக்ஸ் சபை உள்ளது. சுமார் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக கொண்ட இந்த சபையில் 30 டயோசிஸன்கள் உள்ளன. இதில், 7 டயோசிஸன்கள் வெளி மாநிலங்களிலும் 3 டயோசிஸன்கள் வெளிநாடுகளிலும் உள்ளன. சமீபத்தில் இந்த சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மீது திருவல்லாவைச் சேர்ந்த பெண்ணின் கணவர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி கடிதம் எழுதியிருந்தார். ஏற்கெனவே, கேரளாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது ஏராளமான பாலியல் வன்கொடுமைப் புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டும் கேரளாவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுவும் ‘பாவ மன்னிப்பு ‘கேட்ட பெண்ணை மிரட்டி 5 முதல் 8 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
திருமணத்துக்கு முன் பாதிரியார் ஒருவருடன் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு இருந்துள்ளது. இதற்காக அவர் பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அதைக் கேட்ட பாதிரியார் மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், தனக்குத் தெரிந்த பிற பாதிரியார்களிடம் கூறியுள்ளார். அந்தப் பாதிரியார்களும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். டெல்லியிலிருந்தும் ஒரு பாதிரியார் விமானம் பிடித்து, கேரளா வந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அந்தப் பெண்ணையே நட்சத்திர ஹோட்டலில் அறை புக் செய்ய வைத்துள்ளனர். அதற்காக, டெபிட் கார்டில் அந்த பெண் பணம் செலுத்தியிருக்கிறார். அதற்கான பில் அந்த பெண்ணின் இ-மெயிலுக்குச் சென்றுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் வேறு ஒரு நோக்கத்துக்காக மனைவியின் மெயிலைப் பார்த்துள்ளார். அப்போது, ஹோட்டல் பில்லை கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன… ஏதுவென விசாரிக்கையில், தன்னை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்து வருவது குறித்து கணவரிடம் அவர் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் ஆலய நிர்வாகத்துக்கு புகார் கடிதம் எழுதினார். கிறிஸ்தவ சபை தோன்றியதிலிருந்து ‘பாவமன்னிப்பு ‘கேட்டதை வைத்து பாதிரியார்கள் தவறாக நடந்துகொண்டது இதுவே முதன்முறை.
சபையின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்க விரும்பாத அந்தப் பெண்ணின் கணவர் போலீஸில் புகார் செய்யவில்லை. மாறாக தன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது சபை நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கக் கூறி கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக சபை நிர்வாகத்தினர் புகாரை வாபஸ் பெறும்படி அவரிடம் பேசிய ஆடியோவும் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான 5 பாதிரியார்களை இடை நீக்கம் செய்வதாக மலங்கரை சிரியன் சர்ச் தலைவர் மார்த்தோமோ பவுலோஸ் அறிவித்துள்ளார். டெல்லியிலிருந்து விமானத்தில் கேரளா வந்த பாதிரியாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 3 பாதிரியார்கள் மீது தக்க ஆதாரம் கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மலங்கரை ஆர்தோடெக்ஸ் சிரியன் சர்ச் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. குற்றச்சாட்டுக்குள்ளான பாதிரியார்களின் பெயர் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, கேரள மாநில மகளிர் ஆணையம், கேரள போலீஸ் இந்த வழக்கை தானே முன்வந்து விசாரிக்க வேண்டுமென்று கோரியது. தொடர்ந்து கேரள மாநில டி.ஜி.பி லோக்நாத் பெகரா, கேரள மாநில சி.பி.சி.ஐ.டி போலீஸை விசாரித்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கோட்டயத்தில் மற்றொரு பாதிரியார்மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாஸ்திரி ஒருவர் கத்தோலிக்க பிஷப்மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுவேண்டுமென்றே தன்னை பழிவாங்கும் நடவடிக்கையாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிஷப் போலீஸில் புகார் அளித்துள்ளார்.