சீன நிறுவனமொன்றிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணம் பெற்றது தொடர்பான தகவலை ரணில், மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே அமெரிக்க பத்திரிகைக்கு வழங்கியுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி குற்றம்சாடியுள்ளது.
விசாரணை அறிக்கையில் கிடைத்ததாக கூறப்படும் விடயத்தினை எவ்வாறு சர்வதேச ஊடகமொன்றுக்கு அரசாங்கம் முன்வைக்க முடியும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஷான் சேமசிங்க கொழும்பில் இன்று (28.06.2018) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வியெழுப்பினார்.
“கடந்த தினங்களில் அனைத்து ஊடகங்களிலும் பேசுபொருளாக இருந்த விடயம் சர்வதேச ஊடகமான நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஓர் செய்தியாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்பிலும் ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற பணம் தொடர்பிலும் விமர்சத்து அதில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுமான பணிகள் அரம்பிக்கப்படும் பொழுது அது தொடர்பிலான கள அறிக்கையேதும் பெறாமலேயே கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஏற்றுகொள்ள முடியாததாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைப்பதற்கான முதல் கள அறிக்கையினைப் பெற்றது தற்போதைய பிரதமராக கடமையாற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக செயற்பட்ட காலத்திலேயே ஹம்பாந்தொட்டையில் துறைமுகம் அமைக்கலாம் என முதல் அடித்தளம் இடப்பட்டது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஊடாக கள அறிக்கை தயார்படுத்தப்பட்டு, 2003-ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஆனால் மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது பிரித்தானிய நிறுவனம் ஒன்றின் மூலமாக கள அறிக்கை பெறப்பட்டது. அவ் அறிக்கையில் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்க அனைத்து அனுமதியும் கிடைக்கப்பெற்றது. 2001 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவிருந்த கட்டுமானப் பணியின் செலவினை விட 2009-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவினால் அமுல்படுத்தப்பட்ட திட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு குறைவாகவே காணப்பட்டது.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் காலத்தின் போது சீன நிறுவனமொன்று பணம் வழங்கியதாகவும் அப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. குறித்த குற்றச்சாட்டின் உண்மை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் குறித்த பணத்தை வழங்கியதாகக் கூறும் சீன நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளலாம். ஆகவே அரசாங்கமும் ஊடகமும் இது தொடர்பில் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது. நியுயோர்க் பத்திரிகையானது அராசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையொன்றின் மூலமாகவே குறித்த விடங்கள் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் பிணைமுறி விவகார அறிக்கையினை பல்வேறு தரப்பினர் நாடாளுமன்றில் முன்வைக்குமாறு கோரியும் வெளியிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு ஐக்கிய அமெரிக்காவுக்கு சொந்தமான ஒரு பத்திரிகைக்கு விசாரணை அறிக்கையொன்றின் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் இவ் விடயத்தை முன்வைக்க முடிந்தது?. உண்மையிலேயே இவ்வாறானதொரு விமர்சனம் நடைமுறையில் உள்ளதா? அது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் தற்பொழுது மக்களுக்கு கூறவேண்டிய நிலையில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.