`நெல்லையில், அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய 5 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னை மாங்காடு அருகே, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி, பிரபல ரவுடி பினு என்பவர் அரிவாளால் கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். தகவலறிந்த போலீஸார், அந்த இடத்தைச் சுற்றிவளைத்து ஏராளமான ரவுடிகளை ஒரே இடத்தில் கைதுசெய்தனர்.
தற்போது நெல்லையில், ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி பொறுப்பில் இருந்த எஸ்.கே.எம்.கார்த்திக் பாண்டியன் என்பவர், அதேபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார்
கடந்த மார்ச் 13-ம் தேதி தனது பிறந்தநாளை அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடியது சர்ச்சையானதால், ஜான் பாண்டியன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில், மார்ச் 30-ம் தேதி கார்த்திக் பாண்டியன் மற்றும் அவரது நண்பர் செல்வகுமார் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் இளைஞர்கள் சிலர் காட்டுப் பகுதியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள், வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவின.
இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அதில், சிவந்திபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், தனது நண்பர்கள் அந்தோணி, சுனில், வசந்த், பாலசந்தர் ஆகியோருடன் சிவந்திபட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய விவரம் தெரியவந்தது. ஜூன் 19-ம் தேதி அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
ராமச்சந்திரன் அரிவாளால் கேக் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டி மகிழ்ந்ததை, அவரது நண்பர்கள் செல்போன்மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவரம் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிவந்திபட்டி காவல்துறையினர், ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் நடந்து கொள்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.